Total Pageviews

Wednesday, June 1, 2011

Raw materials for Success

உங்களுடைய  வாழ்க்கையில் வெற்றி அடையத் தேவையான மூலப் பொருட்கள் எவை?

     மது வாழ்வில்- எவ்வளவோ திறமைகள் இருந்தும் பலர் தோற்பதையும், சிலர் ஜெயிப்பதையும், வெகு சிலர் மட்டும் அபார வெற்றி பெறுவதையும் பார்த்து வருகிறோம். மக்கள் இதை அதிர்ஷ்டம் என்றும், 'லக்' என்றும், செல்வவளம் என்றும், செல்வாக்கு என்றும், கெட்டிக்காரத்தனம் என்றும், தலை விதி என்றும், கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், யோகம் அடித்தது என்றும், அவருக்கு வந்த வாழ்வு என்றும், மூளை என்றும், உயர் குடிப் பிறப்பு என்றும், ஜாதக அமைப்பு என்றும், ப்ரார்ப்தம் என்றும் பல காரணங்களாகக் கூறி வருகின்றனர்.

     செயல்முறை ரீதியாக வெற்றிக்கு வழிசமைப்பவை என்னென்ன என்று ஏழு வருடங்கள் ஆராய்ச்சி செய்து, 500 வெற்றியாளர்களிடம் பேட்டி கண்டு அந்தப் பல வருட உழைப்பைச் சாறாகப் பிழிந்து மூன்றரை நிமிடங்களில் விளக்குகிறார் ரிச்சர்ட் செயின்ட் ஜான் அவர்கள். 
     உங்கள் தொழிலில், வாழ்க்கையில் வெற்றி அடைய கீழ்க்கண்ட விஷயங்கள் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவை இல்லாவிட்டால் அவமானம், அசிங்கம், தன்னிலை இழத்தல், தலைகுனிவு, ஏமாற்றம், விரக்தி, சறுக்கல், துன்பம், பின்னடைவு, தள்ளாட்டம், அவமதிப்பு, மரியாதைக் குறைவு, வருத்தம், கேவலமான தோல்வி (அப்பப்பா! வெற்றி என்ற ஒரே சொல்லைக் கூற முடியாவிட்டால் எவ்வளவு நெகடிவ் விஷயங்கள்-எதிர்மறைச் சிந்தனைகள் வருகின்றன பார்த்தீர்களா?) இவற்றை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.

      1.  லட்சிய வெறியோடு இரு /ஆழ்ந்த, தீவிரமான, 
           சாதிக்கும்  உணர்வுடன்  இரு  (HAVE PASSION) 
      2.  ஜாலியாக உழை  (WORK HARD HAPPILY- be cool)
      3 . ஏதாவது ஒரே ஒரு துறையில் நிபுணராக இரு (BE A SPECIALIST)
      4 . மனம் குவிந்து இரு (HAVE FOCUS)
      5 . ஊக்கத்தோடு உந்தித் தள்ளு (PUSH YOURSELF)
      6.  தொண்டு புரி / சேவை அளி (SERVE PEOPLE)
      7.  யோசனைகளை உண்டாக்கு (CREATE IDEAS)
      8.  விடாது முயற்சி செய் (PERSIST)                                                                                                                                                                             லட்சியத்தின் மீது வெறி என்றால் கண் மண் தெரியாமல் செயல்படுவதல்ல. பிறரை எவ்வகையிலும் பாதிக்காமல் நாம் உண்டு நமது வேலை உண்டு என்று நமது வேலையில் கண்ணும் கருத்துமாக அதே சிந்தனையோடு உழைப்பது. காசுக்காக செய்யாமல், தனி முத்திரை பதித்து தரமாக வேலை பார்ப்பது.

      ஜாலியாக உழைப்பது என்றால் வேலையையே விளையாட்டாக கருதி வெற்றி தோல்வி பற்றி சஞ்சலமடையாமல் விருப்பத்தோடு செய்தல். கடினமாக உழைக்கும்போது ஏற்படும் உடல் மன வலியை கூடிய மட்டும் பொருட்படுத்தாமல், உற்சாகத்துடன், சந்தோஷமாக உழைத்தல்.

       நிலையான தொடர்ந்த பயிற்சியின் மூலம் உங்களுக்கு விருப்பமான ஒரே ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்து, பல மரம் கண்ட தச்சனைப் போல் மனம் சபலமடையாமல், எல்லா துறைக்கும் ஆசைப்படாமல், எல்லாவற்றிலும் வாயை வைக்காமல்- அதாவது நுனிப்புல் மேயாமல், ஒரே இலக்குடன், அதை நோக்கிச் செல்லும்போது திரும்பிப் பார்க்காமல், அந்த துறையில் சிறந்த நிபுணத்துவம் பெறுதல்.

       மனக் குவிப்பு அல்லது ஏகாக்கிர சித்தம் அல்லது மனங் குவிந்த ஓர்மையுடன் கூடிய கவனம்  என்பது முடிவு செய்த ஒரே விஷயத்தின் மீது, வேலையின் மீது உங்கள் முழு ஆற்றலையும் செலுத்தி, ஒரு வழிச்சாலையில் செல்லும் கார் போல, கடிவாளமிட்ட குதிரையைப் போல, முழு சக்தியையும் பயன்படுத்தி, எல்லாத் திறமைகளையும் ஒன்று சேர்த்து பாடுபடுதல்.

        உந்தித் தள்ளு என்பது மனரீதியாக, உடல்ரீதியாக உங்களை நீங்களே துணிவுடன், உந்தித் தள்ள வேண்டும். அதாவது பிறர் என்ன நினைப்பார்களோ?, இது என்னால் முடியுமா? தோல்வி வருமோ? தோல்வியடைந்தால் என்ன ஆவது? என்றெல்லாம் அதிகம் யோசித்து - வெட்கப்படாமல், தயங்காமல்,  சுய சந்தேகத்தையும் பயத்தையும் உதறித் தள்ளி, ஊக்குவித்துக் கொள்ளல். உறுதியுடன் மேலே செல்லுதல்.

        தொண்டு புரி அல்லது சேவை அளி என்பது ஒரு பொருளுக்குரிய விலை மதிப்பைக் கொடுத்தல். There is no free lunch என்று ஒரு வாக்கியம் உண்டு. அதாவது யாரும் இலவசமாக எதையும் தருவதில்லை- எந்த பொருளுக்கும் உரிய பணத்தை நாம் அளித்தால்தான் விரும்பியதை பெற முடியும். அது போல மக்களுக்கு பயன் படக்கூடிய மதிப்புமிக்க ஏதோ ஒன்றை உருவாக்கி, கண்டுபிடித்து அளித்தால்தான் மக்கள் பதிலுக்கு பணம் கொடுத்து வாங்குகின்றனர். சேவையை அளிப்பவரும் செல்வம் சேர்க்கிறார். ( இக் கருத்து ஏழைகளுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டு தொடர்பானதல்ல) இது ஒரு பண்டமாற்று அல்லது பதிலுதவி போன்றது.

        யோசனைகளை உருவாக்கு என்பது மிகச்சிறப்பான, புதுமையான, மதிப்பு வாய்ந்த, பலபேருக்குப் பயனளிக்கக்கூடிய யோசனைகளை உருவாக்குதல். 

        விடாமுயற்சி என்பது குறிக்கோளை அடையும்வரை- இடைவிடாது முயலுதல்.

         இவற்றின் மூலம் எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும் என்றாலும் அது நீடித்து, நிலையாக இருக்க எந்த உத்திரவாதமும் இல்லை. என்னுடைய பதினைந்து ஆண்டு கால சுய ஆராய்ச்சியில் நான் உணர்ந்தது என்னவென்றால் மேற்கண்ட பட்டியலுடன் முக்கியமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது, "நல்லெண்ணம்" என்பதாகும்.

    9 . GOODWILL- நல்லெண்ணம் கொள்

             அதாவது உயர்ந்த சிந்தனை, பரந்த நோக்கம், எல்லோருக்கும் எந்த காலத்திலும் நல்லது நடக்க வேண்டும் என்ற அக்கறையுடன், சமூக பொறுப்புடன் கூடிய எண்ணம். நீங்கள் பெறப்போகும் வெற்றிக்கு நல்ல எண்ணம்தான் பில்லியன் டாலர் மதிப்புடைய காப்புறுதி (Insurance) போலச் செயல்பட்டு வெற்றியைத் தக்க வைக்கிறது. 

         சாயி பக்தர்கள் அனைவரும் தமது வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளைக் குவித்து சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வாழ்க வளமுடன்! என வாழ்த்துகிறேன்.

        நமக்கு உதவ, வழிகாட்ட, ஆண்டவர் ஷீரடி சாயிபாபா  என்றும் உள்ளார் - ஆனால், நாம் சோம்பேறியாக இருப்பதையோ, முயற்சியைக் கைவிடுவதையோ, ஊக்கம் இழப்பதையோ பாபா விரும்பியதில்லை. நம்மால் முடிந்த முழு முயற்சியையும் செய்து விட்டு, பலனை நினைத்து பதட்டப் பட்டுக்கொண்டு இருக்காமல் பாபாவிடம் விட்டு விடுவது சிறந்தது.


  ஜெய ஜெய சாயி  ஓம்.                                

    No comments:

    Post a Comment

    Note: Only a member of this blog may post a comment.