Total Pageviews

Thursday, September 19, 2013

Lendi Baug

லெண்டி பாக் - பூந்தோட்ம்

லெண்டி பாக் பூந்தோட்டத்தில் பாபா வளர்த்த வேப்ப மரம் மற்றும் போதி மரங்களுக்கிடையில் அவர் விளக்கேற்றிய இடத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படும் நந்தாதீப் விளக்கு - பழைய படம்




லெண்டி பாக் எனப்படும் அழகிய பூந்தோட்டம், ஷீரடியில் பாபாவின் உழைப்பினால் உருவான ஒன்றாகும். இப்பூந்தோட்டம் 'குருஸ்தான்' என்கிற புனித இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. புதர்ச்செடிகளும், குத்துச் செடிகளும் சூழ்ந்த இவ்விடத்தில்தான் பாபா உலாவுவது வழக்கம். அந்தக் காலத்தில் இங்கு ஓடிய கால்வாயின் பெயரால் இப்பூந்தோட்டத்தின் பெயர் 'லெண்டி' என ஏற்பட்டது. காலை மற்றும் நண்பகல் வேளையிலே இங்கு இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் சாயி பாபா இளைப்பாறுவது வழக்கம். இந்த வேப்ப மரத்தடியில் சிறு குழிதோண்டி பாபா மண்விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். அதன் நினைவாக இப்போது இங்கு 'நந்தாதீப்' எனும் விளக்கினை தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். 'தீப்க்ரிஹா' என்கிற மார்பிள் கல்லால் ஆன எண்கோண வடிவ விளக்கு மாடத்தினுள் ஓர் கண்ணாடி பெட்டிக்குள் நந்தாதீப் விளக்கு அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. அரச மரம் அல்லது போதி மரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் இடையில்தான் நந்தாதீப் விளக்கு எரிந்துகொண்டு உள்ளது. இந்தப் பூந்தோட்டத்தை எப்போதும் பார்வையிடலாம் என்றாலும், ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷீரடியின் தட்பவெப்ப நிலை இனிமையாக இருக்கும். ஷீரடி- மன்மாடு மாநில நெடுஞ்சாலை அருகே லெண்டி பூந்தோட்டம் அமைந்துள்ளது.

 
Photo Courtesy: Doshi ashutosh, saileelas.org

Friday, September 6, 2013

Free Cataract Surgery

ஷீரடியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை

திரு. சிவாஜி கோண்ட்கர்
கடந்த ஏப்ரல் 1 முதல் நான்காம் தேதி வரை ஷீரடியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த முகாமினை ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், லகானுபாய் அம்ருத்ராய் கோண்ட்கர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஷீரடி சாயிநாத் மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்தன. 125 ஏழைகளுக்குத் தனது தாயின் நினைவாக, ஷீரடி முனிசிபாலிடியின் துணைத் தலைவர் திரு. சிவாஜி கோண்ட்கர் இந்த இலவச அறுவை சிகிச்சையை உபயமாக அளித்தார். இந்த சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகள், மருந்து, உணவு மற்றும் தங்குமிட செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டார். இறந்த உறவினர் நினைவில், பிடிவாதமாக பழைய சடங்குகளைச் செய்வதைக் காட்டிலும் இதுபோல் ஏழைகளுக்குத் தொண்டு புரிவதையே தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

அங்கு வந்த அனைத்து ஏழை நோயாளிகளுக்கும் டாக்டர் சுனில் சொண்டாகே அறுவை சிகிச்சை செய்தார். இது போன்ற தொண்டு முகாம்களை நடத்திட பலரும் முன்வர வேண்டும் என்று டாக்டர் சுனில் கேட்டுக்கொண்டார். திரு. சிவாஜி கோண்ட்கர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தமது தாயாரின் நினைவாக, ஷீரடி சாயிபாபா பள்ளியில் 10ஆவது மற்றும் 12 ஆவது வகுப்புகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணாக்கருக்கு ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


சிகிச்சைக்கு வந்திருந்த பெண்மணிகள்


(Video Courtesy: rOhiT BeHaL)

ஓம் ஆரோக்கியக்ஷேமதாய நமஹ:

(பக்தருக்கு ஆரோக்கியமும், நலமும் வழங்கி அருள்பவரே போற்றி)











Rudraksha Shawl!

பாபாவுக்குப் பஞ்சமுக ருத்ராக்ஷத்தால் சால்வை!


ஹிந்துக் கலாச்சாரத்தில் ருத்ராக்ஷ மரத்தின் விதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சமஸ்க்ருத மொழியில் 'ருத்ரா' என்பது சிவபெருமானையும், 'அக்ஷா' என்பது (அவரது) கண் நீர்த்துளியையும் குறிக்கும். பழமையான புராண இலக்கியங்களில் இந்த ருத்ராக்ஷ மரம் சிவபெருமானின் கண்ணீர்த்துளிகளில் இருந்து உருவாகியதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்ச முகம்
சிவபுராண புனித நூலில் முன்னொரு யுகத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக ஆழ்ந்த தவ நிலையில் இருந்த சிவபெருமான் தம் கண்களைத் திறந்த பொழுது கீழே பூமியில் விழுந்த கண்ணீர்த் துளிகள் வித்தாகி, ருத்ராக்ஷ மரமாக உருவாயிற்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.ருத்ராக்ஷ விதைகளுக்கு பல மருத்துவ குணங்களும் உள்ளதென பெரியோர் கூறுவர்.இந்த ருத்ராக்ஷ விதைகள் - ஏக முகி, த்வி முகி, த்ரி முகி, சதுர் முகி, பஞ்ச முகி, ஷத் முகி, சப்த முகி, அஷ்ட முகி, நவ முகி, தச முகி, ஏகாதச முகி, த்வாதச முகி, த்ரயோ தச முகி, சதுர்தச முகி ருத்ராக்ஷம்  (1,2,3,4,5,6,7,8,9,10,11,12 எனப் பல முகங்கள்), கௌரிஷங்கர் ருத்ராக்ஷம், கணேஷ் கௌரிஷங்கர் ருத்ராக்ஷம் எனப் பல வகைகளாக உள்ளன. இவை அனைத்தும் காணக் கிடைப்பது மிகக் கடினம்.

ருத்ராக்ஷ மரம், பூ, பழம் மற்றும் பல்வேறு முகம் கொண்ட விதைகள் (Photo Courtesy: Adam Kadmon)
இந்தோனேசியா, இந்தியாவின் இமயமலைப் பகுதி, பீகார், மத்திய பிரதேசம், பெங்கால், அஸ்ஸாம், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் நேபாளில் இம்மரங்கள் காணப்படுகின்றன. நடுத்தர உயரமுள்ள இம்மரங்களின் பூக்கள் வெண்ணிறமானவை. ஆயுர்வேத மருத்துவத்தில் ருத்ராக்ஷ பழங்களும், விதைகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிவமாகிய திரு நீல கண்டத்தினை நமக்கு மறைமுகமாக உணர்த்துவது போல், ருத்ராக்ஷப் பழம் பிரகாசமான நீல நிறத்தில் உள்ளது வியப்பாக உள்ளது.
பஞ்ச (ஐந்து) முக ருத்ராக்ஷம்

சிவத்தின் வடிவம் - அரிய வகை - ஏக (ஒரே முகம்) முகி ருத்ராக்ஷம்
உடல் உஷ்ணத்தைக் குறைத்திடவும், தோல் நோய், மன நோய், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சுரம் போன்ற பல வியாதிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பல ருத்ராக்ஷ விதைகள் இயற்கையிலேயே நடுவில் துளையோடு உருவாவது தெய்வீகச் சிறப்பு. யோகிகள் மாலையாக அணிவதற்கு வசதியாக மனித இனத்துக்கு ஓர் வரப்பிரசாதமாக இயற்கையாகவே சிறு ஓட்டை உள்ளது. சிவ பக்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், மரண பயம் அகன்று ஆன்மீகப் பயணத்தில் வெற்றி பெறவும் தம் உடலில் அணிகின்றனர்.
கடந்த செப்டெம்பர் 2, 2013 திங்கட்கிழமை அன்று, சோம பிரதோஷ நன்னாளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் முழுவதும் பஞ்சமுக  ருத்ராக்ஷத்தால் செய்யப்பட்ட இரண்டு சால்வைகளை பாபாவுக்குக் காணிக்கையாக ஷீரடியில் அளித்தார். 10800 ருத்ராக்ஷங்களினால் செய்யப்பட்ட ஒரு மாலை சாயி பாபாவின் மூர்த்தி மேல் சாற்றப்பட்டது. 8000 ருத்ராக்ஷங்களினால் செய்யப்பட்ட இன்னொரு மாலை பாபாவின் சமாதி மேல் போர்த்தப்பட்டது.


ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி ஜெய ஜெய சாயி