Total Pageviews

Wednesday, April 13, 2011

Malaysia Vasudevan's Service

மலைசியா வாசுதேவனின் மறக்க முடியாத தொண்டு 

இனிய பாடல்களைப் பாடி, கச்சேரிகள், பஜனைகள், ஒலி நாடாக்கள் மூலம் சாயி பக்தியை தமிழ்நாட்டில் பரப்பியவர்கள் பல பேர். அவர்களுக்கெல்லாம் முன்னோடி - இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த திரு. கணபத் ராவ் தத்தாத்ரேய சஹஸ்ர புத்தே என்பவரே. பாபாவின் நெருங்கிய பக்தரான சந்தோர்க்கருடன் ஒரே இடத்தில் பணிபுரிந்த இவர் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார். இந்த கணபத் ராவ்தான் பின்னாளில் தாஸ்கணு மஹராஜ் என்ற பெயருடன் பக்தி இசைப் பேருரைகள், பொம்மலாட்டங்கள், பஜனைப் பாடல்கள் மூலம் சாயி பக்தியைப் பரப்பிய பெரும் பாடகராக ஆனார்.
தமிழ்நாட்டில் சாயி பக்தியைப் பாடல்கள் மூலம் பரப்பிய புகழ் பெற்ற பாடகர்கள் - வீரமணி, கே.ஜே.யேசுதாஸ், இளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி, சித்ரா, பாலமுரளி கிருஷ்ணா, நித்யஸ்ரீ, ஜெயச்சந்திரன், உன்னிகிருஷ்ணன், வீரமணி கண்ணன், மகாநதி ஷோபனா, சைந்தவி, சுனந்தா, அனுராதா போட்வால், ஷங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ என மிகப் பலர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியவர் "தமிழ்நாட்டு தாஸ்கணு" என்ற பட்டத்தைப் பெற்ற மலைசியா வாசுதேவன் அவர்கள்.
மலைசியா வாசுதேவன் அவர்கள் 15 ஜுன் 1944 இல் மலைசியாவில் பிறந்தார். இவரது அற்புதமான சாயி பக்திப் பாடல்கள் உள்ளத்தை நெகிழச் செய்து, நம்பிக்கை, பொறுமை, மகிழ்ச்சி, சாந்தம் இவற்றை நமக்கு அளிக்க வல்லவை. இவர் கடந்த 20  பிப்ரவரி 2011 அன்று சென்னையில் காலமானாலும் இவரது குரலால் உயிருடன் இருந்து சாயி பக்தர்களை தனது பாடல்களால் மகிழ்வித்துக் கொண்டே இருப்பார்.  
விநாயகர் பாடல்களுக்கு சீர்காழி கோவிந்தராஜன் -- முருகன் பாடல்களுக்கு டி.எம்.சௌந்தரராஜன் -- ஐயப்பன் பாடல்களுக்கு கே.ஜே.யேசுதாஸ் -- அம்மன் பாடல்களுக்கு வீரமணி -- என்ற வரிசையில் சாயி பாடல்களுக்கு மலைசியா வாசுதேவன் என்றால் அது மிகையாகாது. இவரது மிகச் சிறந்த சாயி ஆல்பம் - சாயி வெங்கடேசன் வழங்கும் சாயி நவஜோதி (2008) என்ற இசைத் தட்டு ஆகும். மலைசியா வாசுதேவனின் பல ஆடியோ இசைத் தொகுப்புக்கள் உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் வீட்டில் இசை மணம் பரப்ப உதவுகின்றன. ஒரு முறை கேட்டு பாருங்கள் - மீண்டும் மீண்டும் கேட்டு மகிழத் தோன்றும்.
வளர்க சாயி பக்தி ! தமிழ் பேசும் இடமெங்கும் சாயி சன்மார்க்கச் சிந்தனைகள் பரவுக !