Total Pageviews

Saturday, February 15, 2014

Baba's Dress- part 5

சாயிபாபாவின் உடை -- பகுதி 5

  
திரு. தத்யா சாஹேப் நூல்கர், தனது ஷீரடி விஜயத்தைப் பற்றியக் குறிப்புகளில் தான் பாபாவிடமிருந்து அவர் உடையினை பிரசாதமாகப் பெற்றதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள், சாவடியின் ஒரு தூண் அருகில் திரு. அப்பா கோட்டே வந்து நின்றார். அவர் தமது கை விரல்களில் ஒரு கந்தல் துணியினைச் சுற்றிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட நூல்கர் அவரின் விரல்களில் ஏதேனும் அடிபட்டு இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு திரு. அப்பா கோட்டே- இல்லை, இது சாயிபாபாவின் உடையான கப்னியின் கிழிந்த ஓர் பகுதியாகும் என்று கூறினார். அப்பா கோட்டேவை 'நீங்கள் ஏன் கிழித்தீர்கள்'? என்று நூல்கர் கேட்டார். 

அதற்கு கோட்டே, பாபா விளக்குகளை எரிய வைப்பதற்காகத் திரி போல கப்னி உடையின் பகுதியைக் கிழித்துப் பயன் படுத்தியதாகவும், ஒரு சிறிய துண்டு தொங்கிக் கொண்டு இருந்ததாகவும், அந்த துண்டினையே தாம் எடுத்து வந்து விரல்களில் சுற்றிக் கொள்வதாகவும்' கூறினார். திரு. அப்பா கோட்டே பாபாவிடம், தம் உடையின் ஒரு சிறிய பகுதியாவது அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளத் தருமாறு வேண்டியதாகவும், அதுவே அவருக்குக் கிடைத்த அந்தத் கந்தல் துண்டுப் பகுதி என்றும் கூறி மகிழ்ந்தார். இதைக் கேட்ட நூல்கருக்கு பாபா தமது கையால், நூல்கர் கேட்காமலேயே ஒரு கப்னி பரிசாகத் தரப்போகின்றார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.


ஒருநாள் நண்பகல் வேளையில் பாபா, திரு. நூல்கரை துவாரகாமாயிக்கு வரவழைத்தார். உடனே ஓடோடிச் சென்றார், நூல்கர். அப்போது பாபா, தமது உடையினைக் கழட்டி நூல்கரிடம் அளித்துப் பின்வருமாறு கூறினார். " இதை வைத்துக் கொள். கடுங்குளிர் காலத்தில் இரவு வேளைகளில் இந்த உடை உன்னைக் கதகதப்பாக வைத்திருக்கும்" என்று கூறினார். கேட்காமலேயே அருள் புரிந்த பாபாவின் ஆசிகளைப் பெற்ற நூல்கரின் அதிர்ஷ்டம்தான் என்னே! இந்த அனுபவம், பாபா எவ்வாறு பிறர் மனத்தினை படிக்க வல்லவர் என்பதையும், எங்கும் எப்போதும் நிறைந்துள்ள பாபாவின் தெய்வீக சர்வ வியாபகத் தன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. 

சாயிபாபாவின் மேலும் ஒரு திருவிளையாடலைக் காண்போம். திரு. ஜோதீந்திரா தார்கட் தனது சிறு வயதிலிருந்தே பாபாவின் மிகச்சிறந்த பக்தராக விளங்கினார். அவரின் குடும்பம் பல்வேறு வியக்கத்தக்க அனுபவங்களை பாபாவினால் அடைந்து வந்தது. தந்தை-மகனைப் போன்ற பாசமிக்க உறவு, பாபாவுக்கும் திரு. ஜோதீந்திராவுக்கும் இருந்துவந்த காலத்தில் ஒரு நாள் ஷீரடிக்கு தார்கட் குடும்பம் வந்திருந்த சமயம்.. பிரதிபலன் பாராது பாபா இட்ட வேலைகளைச் செய்ய திரு. ஜோதீந்திரா விருப்பத்துடன் இருந்தார். 

அப்போது ஒரு நாள் பாபா, திரு. ஜோதீந்திராவிடம் தாம் லெண்டி பாக் (பூங்கா) கிற்குக் குளிக்கச் செல்வதாகக் கூறி, ஜோதீந்திராவிடம் ஒரு வேலையை செய்யுமாறு பணித்தார். அப்போது பாபா கூறியதாவது, "எனக்கு குளிப்பது சிரமமான காரியம் அல்ல. ஆனால் என் ஆடையினைத் துவைக்க வேண்டும். அதற்கு என் கப்னியைத் தருகிறேன். அதை நீ கிணற்றுக்கு எடுத்துச் சென்று நீரில் நன்கு அலசித் துவைக்க வேண்டும். குளித்து முடித்து நான் வருவதற்குள் என் ஆடை காய்ந்து உலர்ந்து விடலாம். நான் குளியலை முடிப்பதற்கு வெகு நேரம் எடுக்கும் என்பதை நீ அறிந்துள்ளமையினால் அந்த இடைவெளியில் துணியைக் காய வைத்துவிடு. ஆனால் துணியை மண் தரையிலே போட்டு இழுத்துப் பரப்பிக் காய வைக்கக் கூடாது. அகலமாகக் கையில் பிடித்தபடி துணியை உலரவைக்க நின்று கொள் " என்று கூறிவிட்டார். பாபா அந்த காலகட்டத்தில், கடுந்தவம் இயற்றும் ராஜயோகியாய், அகச்சுத்தம் மற்றும் புறச்சுத்தத்துடன் பல்வேறு யோகக் கிரியைகள் செய்து குளித்து முடித்து தமது இருப்பிடம் திரும்ப வெகு நேரம் ஆகும். ஆதலால் பாபாவுக்குப் பணிவிடை செய்ய விரும்புபவர், பணியை ஏற்றுக் கொள்பவர் மிகுந்த பொறுமை மற்றும் நிதானம் உடையவராக இருத்தல் வேண்டும். பாபாவின் கட்டளையை ஏற்றுக் கொண்ட ஜோதீந்திரா, கூடவே லெண்டி பாக் சென்றார்.

லெண்டி பூங்காவில் தகரத் தகடுகளால் வேயப்பட்ட ஒரு குளியலறையும், பாபா அமர்ந்து குளிப்பதற்கு ஓர் செவ்வக வடிவ கல்லும் இருந்தன. பாபா கூறியதை கேட்டுக் கொண்ட ஜோதீந்திரா, "பொதுவாக பிறரை வாழ வைக்க எவரையும் எதிர்பார்க்காமல் கடுமையாக, தானே உழைப்பதை விரும்புபவரான பாபா காரணமில்லாமல் இது போல் வேலை வாங்க மாட்டார் என்பதினால், இதில் ஏதோ ஒரு படிப்பினை நமக்கு இருக்க வேண்டும்" என்று மனதிற்குள் யூகித்தார். பாபா அறைக்குள் குளிக்கச் சென்றவுடன் கப்னியை பெற்றுக் கொண்ட ஜோதீந்திரா கிணற்றடியில் அலசி, துவைத்து கைகளில் ஏந்திப் பிடித்துக் கொண்டு பாபா கூறியவாறு வெயிலில் காயவைத்துக் கொண்டு நின்றார். 

நேரமோ ஆகிக் கொண்டே இருந்தது. பாபா இன்னும் குளியலை முடிக்கவில்லை. வியர்த்து விறுவிறுத்து, சிறிது சிறிதாக பொறுமை இழக்க ஆரம்பித்தார், ஜோதீந்திரா. தெய்வத்திற்கு பணிவிடை செய்வதைவிட குருவுக்குப் பணிவிடை செய்வது அதிக சவாலானது. மாபெரும் சித்தர், ரிஷி முனிவர் போல் காட்சியளித்தாலும் - சிவ அவதாரமாகவே விளங்கிய பாபாவுக்குப் பணிவிடை செய்வதில் பெரும் சிரத்தை, பக்தி, விருப்பம், தொண்டு மனப்பான்மை, விவேகம், பொறுப்புணர்வு - இவையெல்லாம் மிக முக்கியம் அல்லவா? 'சாயி மஹராஜ்' என்று அழைத்து பாபாவுக்குப் பணிவிடை புரிந்து அவர் ஆசிகளைப் பெற்றுக் கொள்ள, பல நூறு பேர் விரும்பிய அந்நாட்களில், அவர் அருகாமையில் சாதாரணமாகப் பேசிக் கொண்டு இருக்கக் கூடிய அதிர்ஷ்டம் இருந்தவர்கள் மிகச் சிலரே. 

ஆனால் அவசர புத்தியுடன் பொறுமை முற்றிலும் இழந்த ஜோதீந்திரா 'இவ்வளவு மணி நேரங்கள் ஆகியும் பாபா குளியலை முடிக்கவில்லையே என்று பதட்டத்துடன், கைகளில் கப்னியுடன் குளிக்கும் இடம் அருகே சென்று எட்டிப் பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை பேச்சு இழந்து, ஓர் புரியாத மந்திர சக்தியில் கட்டுண்ட நிலையைத் தந்தது. ஜோதீந்திரா தனது கண்கள் குருடாகிவிடுமோ என்று பயப்படக்கூடிய அளவிற்கு உள்ளே, பாபா அமர்ந்திருந்த இடத்தில் கண்கூசும் வெளிச்சத்துடன் மிகப் பிரகாசமான சூரியப் பிழம்பாக பேரொளி தெரிந்தது. இதைக் கண்டு மிரட்சியுடன், பாபா கூப்பிடுவதற்கு முன், தான் வந்துவிட்ட முட்டாள்தனமான தவறினைக் கண நேரத்தில் உணர்ந்து சுதாரித்துக் கொண்ட ஜோதீந்திரா, மீண்டும் தனது இடம் சென்று பாபா அழைக்கும்வரை காத்திருக்க ஆரம்பித்தார். அதே நேரத்தில், தனது ஆடை காய்ந்துவிட்டிருந்தால் எடுத்து வருமாறு பாபா குரல் கொடுத்தார்.

அப்போது ஜோதீந்திரா, தனது கைகளில் ஈரமான ஆடையை உலர்வதற்காகப் பிடித்திருந்தார் அல்லவா? உச்சி வெய்யிலில், அந்த ஆடை அவ்வளவு நேரம் ஆகியும் காயவில்லை. சீக்கிரம் காயவைப்பதற்காகத் தன் தலைக்கு மேல் இரு கைகளிலும் ஆடையை சூரியனை நோக்கி, தூக்கிப் பிடித்தபடி நின்றார், ஜோதீந்திரா. பாபாவின் கப்னியை, இந்நாட்களில் ஷீரடி செல்லும் பாக்கியம் பெற்றவர்கள் - அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் பார்த்திருப்பார்கள். மிகப் பெரிதாக ஒரு ரஜபுத்திர அரசரின் உடை போல் கம்பீரமாக, பெரிய அளவில் அது இருக்கும். நிச்சயம் அந்த முரட்டுத் துணியின் எடையும் அதிகமாகத்தான் இருந்திருக்கும். இந்த நிலையில் நேரம் செல்லச் செல்ல அந்த ஈரத் துணியின் எடை அதிகரிக்க ஆரம்பித்தது. 

வெயிலில் துணி காய்ந்து எடை இலேசாக மாறுவதற்குப் பதிலாக கருங்கல் போல் கனக்க ஆரம்பித்தது. இதனால் பயந்துபோன ஜோதீந்திராவினால் அதை சுமக்க முடியவில்லை. எடை அதிகரிக்க, அதிகரிக்க அவரின் கைகள் வலியில் கடுக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அவரின் கைகள் கடுமையாக வலிக்கவே, ஜோதீந்திரா- தான் கீழே விழுந்து விடுவோமோ, துவைத்த துணி கீழே மண்ணில் விழுந்து விடுமோ என்று எண்ண ஆரம்பித்தார். இந்த அதிசயமான, விசித்திர நிகழ்ச்சியால் பயந்த ஜோதீந்திரா வேறு வழி எதுவுமின்றி, தாம் ஏற்றுக் கொண்ட இப்பணியினை முடிக்க தம் இஷ்ட தெய்வமான ஸ்ரீ ஆஞ்சநேயரை மனதிற்குள் வேண்டினார். அந்த எடையினைத் தாங்குவதற்கு அதிக பலம் வேண்டி ஹனுமாரை மனதிற்குள் வேண்டியபடி "     இலங்கையை எரித்த ஸ்ரீ ஹனுமானே, இந்த சேவையை செய்து முடிக்க பெரும் பலத்தினைக் கொடு.  ஓ! இராம பக்த ஹனுமானே, பாபாவின் பக்தனாக இந்த சேவையை நான் செய்து முடிக்க சக்தியைக் கொடு  " என்று வேண்டி மந்திரங்களை முணுமுணுக்கத் தொடங்கினார். அப்போது . . .

(தொடரும்)

Monday, February 10, 2014

Motivational Poem



விட்டுவிடாதே !



ஷீரடி சாயிபாபாவின் சன்மார்க்க நல்வழிப் பாதையில் நடந்து கொண்டே வாழ்வின் பெருஞ் சிக்கல்களுக்கு விடை கண்டு, நெடும் பயணத்தைத் தொடர்ந்து வரும் சாயிபக்திச் செல்வரே, சோதனையில் எழும் வேதனையைச்  சகித்து, புண்ணிய கர்மத்தை வளர்த்து, மனம் துவண்டு களைத்து விடாமல், விட்டு விலகாமல், அடுத்தடுத்து முயன்றால்தான் சாதனை பிறக்கும்.
நம் மனதிற்கு ஊக்கத்தை ஊட்டும் உற்சாகக் கவிதைதான், யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய         " Don't quit " என்கிற புகழ் பெற்ற கவிதை. அதை உமக்காகத் தமிழில் தருகிறோம்.... இதோ -



சில விஷயங்கள் சில வேளைகளில் 
தவறாகப்போய் விடும்போது 
கஷ்டப்பட்டு நெடுந்தூரம் கால்கடுக்க நடந்து 
செல்லும்உன் பாதையோ
வழுக்கி விடும் பாறைகளோடு மலைச்
சரிவாய் மேலே போகும்போது,

பணம் கைஇருப்புக் குறைவாக, 
கடன் அதிகமாகவும் இருக்கும்போது 
சிரிக்க விரும்பி அது முடியாமல்
நீ ஏக்கப் பெருமூச்சு விடலாம்
கொடும் கவலை உன்னைக் கீழேதள்ளி 
மெல்லமெல்ல அழுத்தும்போது,
 
வேண்டுமானால் சற்று இளைப்பாறு - 
ஆனால் நீ விட்டுவிடாதே!

முறுக்கிய சுற்றுக்களோடும் 
எதிர்பாரா திருப்பங்களோடும் 
வாழ்க்கை விநோதமானது.
நம்மில் ஒவ்வொருவரும் 
எப்போதாவது கற்றுக் கொள்வது -
'தோல்வி மேல்தோல்வி வந்தடைந்த வேளையில் 
அவர் முயற்சி யிலேயே முனைந்து இருந்தால்
வெற்றியை அடைந்து இருப்பார்' என்று. 


நடக்கும்வேகம் மெதுவாய்த் தோன்றலாம்...
ஆனால் நீ விட்டுவிடாதே!
அடுத்த அடியில் நீ ஜெயிக்கக் கூடும்!!

பல சமயங்களில் உன் குறிக்கோள் 
உள்ளது, மிக அருகிலேயே  -
மேலே போகத் தயங்கிமனந் தளர்ந்து 
பயந்தவர் நினைத்ததை விட.
பல சமயங்களில் போராடுபவர் கைவிட்டு விட்டார்  -
வெற்றிக் கோப்பை யினைதட்டிச் செல்லும் 
வாய்ப்பி ருந்தபோது.

இரவுநழுவும் வேளையிலே காலங்கடந்து போனபின்னே 
அறிந்து கொள்கிறார் -
தங்கக் கிரீடத்தை எடுத்துக் கொள்ள 
எவ்வளவு அருகே 
தான்நெருங்கி இருந்ததை.

தோல்வியாய் வெளியில் தெரியும் புரட்டிப்பார் 
அதனுள்ளே தான்வெற்றி -
வெளிறிய வெள்ளி அவநம்பிக்கை மேகங்கள் 
சூழ்ந்து அவற்றிடையே.
எவ்வளவு கிட்டத்தில் நீ நெருங்கி உள்ளாய் 
என்பதை எப்பொழுதும் கூற முடியாது -

தொலை தூரமாய் தோன்றும்போது 
அது அருகிலேயே இருக்கலாம்.
ஆகையால் மிகுந்த துர்பாக்கிய நிலைமை யிலும் 
நெஞ்சு உறுதி யுடன் போராடு..
நிலைமை மிக மோசமாய்த் தோன்றும்போது தான்  - 
நீ விட்டுவிடவே கூடாது..
நீ விட்டுவிடவே கூடாது...


சாயிராம் சாயிராம் சாயிராம்.