Total Pageviews

Friday, September 6, 2013

Rudraksha Shawl!

பாபாவுக்குப் பஞ்சமுக ருத்ராக்ஷத்தால் சால்வை!


ஹிந்துக் கலாச்சாரத்தில் ருத்ராக்ஷ மரத்தின் விதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சமஸ்க்ருத மொழியில் 'ருத்ரா' என்பது சிவபெருமானையும், 'அக்ஷா' என்பது (அவரது) கண் நீர்த்துளியையும் குறிக்கும். பழமையான புராண இலக்கியங்களில் இந்த ருத்ராக்ஷ மரம் சிவபெருமானின் கண்ணீர்த்துளிகளில் இருந்து உருவாகியதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்ச முகம்
சிவபுராண புனித நூலில் முன்னொரு யுகத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக ஆழ்ந்த தவ நிலையில் இருந்த சிவபெருமான் தம் கண்களைத் திறந்த பொழுது கீழே பூமியில் விழுந்த கண்ணீர்த் துளிகள் வித்தாகி, ருத்ராக்ஷ மரமாக உருவாயிற்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.ருத்ராக்ஷ விதைகளுக்கு பல மருத்துவ குணங்களும் உள்ளதென பெரியோர் கூறுவர்.இந்த ருத்ராக்ஷ விதைகள் - ஏக முகி, த்வி முகி, த்ரி முகி, சதுர் முகி, பஞ்ச முகி, ஷத் முகி, சப்த முகி, அஷ்ட முகி, நவ முகி, தச முகி, ஏகாதச முகி, த்வாதச முகி, த்ரயோ தச முகி, சதுர்தச முகி ருத்ராக்ஷம்  (1,2,3,4,5,6,7,8,9,10,11,12 எனப் பல முகங்கள்), கௌரிஷங்கர் ருத்ராக்ஷம், கணேஷ் கௌரிஷங்கர் ருத்ராக்ஷம் எனப் பல வகைகளாக உள்ளன. இவை அனைத்தும் காணக் கிடைப்பது மிகக் கடினம்.

ருத்ராக்ஷ மரம், பூ, பழம் மற்றும் பல்வேறு முகம் கொண்ட விதைகள் (Photo Courtesy: Adam Kadmon)
இந்தோனேசியா, இந்தியாவின் இமயமலைப் பகுதி, பீகார், மத்திய பிரதேசம், பெங்கால், அஸ்ஸாம், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் நேபாளில் இம்மரங்கள் காணப்படுகின்றன. நடுத்தர உயரமுள்ள இம்மரங்களின் பூக்கள் வெண்ணிறமானவை. ஆயுர்வேத மருத்துவத்தில் ருத்ராக்ஷ பழங்களும், விதைகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிவமாகிய திரு நீல கண்டத்தினை நமக்கு மறைமுகமாக உணர்த்துவது போல், ருத்ராக்ஷப் பழம் பிரகாசமான நீல நிறத்தில் உள்ளது வியப்பாக உள்ளது.
பஞ்ச (ஐந்து) முக ருத்ராக்ஷம்

சிவத்தின் வடிவம் - அரிய வகை - ஏக (ஒரே முகம்) முகி ருத்ராக்ஷம்
உடல் உஷ்ணத்தைக் குறைத்திடவும், தோல் நோய், மன நோய், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சுரம் போன்ற பல வியாதிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பல ருத்ராக்ஷ விதைகள் இயற்கையிலேயே நடுவில் துளையோடு உருவாவது தெய்வீகச் சிறப்பு. யோகிகள் மாலையாக அணிவதற்கு வசதியாக மனித இனத்துக்கு ஓர் வரப்பிரசாதமாக இயற்கையாகவே சிறு ஓட்டை உள்ளது. சிவ பக்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், மரண பயம் அகன்று ஆன்மீகப் பயணத்தில் வெற்றி பெறவும் தம் உடலில் அணிகின்றனர்.
கடந்த செப்டெம்பர் 2, 2013 திங்கட்கிழமை அன்று, சோம பிரதோஷ நன்னாளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் முழுவதும் பஞ்சமுக  ருத்ராக்ஷத்தால் செய்யப்பட்ட இரண்டு சால்வைகளை பாபாவுக்குக் காணிக்கையாக ஷீரடியில் அளித்தார். 10800 ருத்ராக்ஷங்களினால் செய்யப்பட்ட ஒரு மாலை சாயி பாபாவின் மூர்த்தி மேல் சாற்றப்பட்டது. 8000 ருத்ராக்ஷங்களினால் செய்யப்பட்ட இன்னொரு மாலை பாபாவின் சமாதி மேல் போர்த்தப்பட்டது.


ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி ஜெய ஜெய சாயி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.