சாயிபாபாவின் உடை -- பகுதி 4
ஏழ்மை நிலையில் பக்கிரியாக, துறவு நிலையில் தனக்கென எதுவும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றே நினைத்து- எளிமையாக வாழ்ந்த பாபாவின் உடையும் எளிமையான கப்னி (Kafni) உடைதான். ஷீரடியின் துவாரகாமாயியில் ஒரு மூலையில் பல கப்னி உடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். சாயிபாபா அவ்வளவு சுலபமாக புத்தம் புது உடையைப் பயன்படுத்திவிட மாட்டார். துவாரகாமாயியில் ஒரு பக்கம் அமர்ந்து கிழிந்துபோன தமது கப்னியை தைத்துக் கொண்டு இருப்பார். அதைக் காணும் அன்புச் சிறுவன் தத்யா, (பயஜாபாய் அம்மையாரின் தவப் புதல்வர் இவர். பாபாவை அன்போடு "மாமா" என்று அழைத்த பாக்கியசாலி. தனக்கு அன்னமிட்ட பயஜாபாய் அம்மையாரின் மகனான தத்யாவை தனது சகோதரி மகனாகவே கருதி பேரன்பு கொண்டிருந்தார் சாயிபாபா) குறும்புகள் செய்யும் சுட்டிச் சிறுவன்.
அந்தச் சிறுவன் தத்யா, பாபாவைப் புது உடை அணிந்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வான். இதைப் பொருட்படுத்தாமல் பாபா தாம் இன்னொரு நாள் அணிந்து கொள்வதாகக் கூறி வழக்கம்போல் ஆடைகளைத் தைத்துக் கொண்டு இருப்பார். இது போலவே நாட்கள் ஓடி விடும். இது கண்டு பொறுத்துக் கொள்ளாமல் பாபா மேல் பாசம் கொண்ட சிறுவன் தத்யா தனது விரல்களால், கப்னியில் உள்ள ஓட்டைகளில் நுழைத்து மேலும் பெரிதாக, அகலமாகக் கிழித்து வைத்து விடுவார். தத்யாவின் இந்த குறும்புச் செய்கையினால் பாபாவினால் அந்த உடையினை அணிந்துகொள்ள முடியாமல் போகும். வேறுவழியின்றி பாபா புது உடை அணிய வேண்டி இருக்கும்.
கப்னி உடைகளைத் தமது பக்தர்களுக்குக் கொடுக்கும் போது பாபா- தான் யாருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறாரோ, அவருக்குத்தான் கொடுப்பார். பலர் இந்த ஆடை வேண்டி பல நாள் எண்ணி எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது. தவச் சக்தி மிகுந்த இறை அவதாரமாம் பாபாவின் உடையைப் பெற்றுக் கொள்ளும் பெரும்பேறு, அந்தத் தகுதியை தம் இயல்பிலேயே உடையவர்களுக்கும், அல்லது அந்தத் தகுதியை வளர்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கும், சரியான மனோபக்குவம், ஆன்மீக விருப்பம், முன்னோர் செய்த தவப்பயன், மிகுதியான பக்தி மற்றும் அகங்காரமற்ற நிலை, உண்மை அன்பு - இவை உடையோர்களுக்கே கிடைத்திருக்கும் என்று கூறலாம்.
அவ்வாறு பாபாவிடம் இருந்து நேரடியாக அவரின் உடையைப் பிரசாதமாகப் (அன்புப் பரிசு) பெற்ற பாக்கியசாலிகள் - திரு.பலராம் மான்கர், திரு.உதவேஷ் புவா, திரு. காக்கா தீக்ஷித், திரு.தத்யாசாஹிப் நூல்கர் மற்றும் டாக்டர். கேஷவ் பகவந்த் கவான்கர் போன்ற வெகு சிலரே ஆவர்.
(தொடரும்)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.