Total Pageviews

Sunday, October 6, 2013

Pathways in Hindu Culture

Karma yoga, Gnana yoga, Raja yoga and Bhakti yoga

உலகத்தின் பழமையான கலாச்சாரமும், இடைவெளி இன்றி தொடர்ந்து செழித்து விளங்கும் கலாச்சார வாழ்வியல் முறைதான் ஹிந்துக் கலாச்சாரம். இக் கலாச்சாரம் கடவுளை அறிய, உணர, தொடர்பு கொள்ள, நெருங்க, கடவுளுடன் மனித குலத்தின் உறவை உணர்ந்து கொள்ள உருவாக்கிய பாதைகள்தான் பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம், மற்றும் கர்மயோகம் ஆகும். ஏன் இவ்வளவு விதமான மார்க்கங்கள் (அதாவது பாதைகள், வழிகள்) மக்களுக்கு? ஏன் என்றால் இறைவனின் படைப்பில் ஒருவர் கூட இன்னொருவர் போல நூறு சதவிகிதம் படைக்கப் படவில்லை. அதுதான் அந்த மஹா சக்தியின் திறமை. அவ்வாறு உலகின் எந்த ஒரு இனத்திலும் தனி மனிதர்களின் பிறப்பு, வளர்ப்பு, வயது, படிப்பு, அறிவு நிலை, முயற்சி, ஒழுக்கம், பயிற்சி, புரிந்துகொள்ளும் திறன், விருப்பம், மனோபாவம், வாழ்க்கை லட்சியம் இவை மாறுபட்டு, வேறுபட்டு, தனித்தன்மையோடு இருப்பதால், இருக்க அவர்கள் விரும்புவதால்- மனித இனத்தை வழி நடத்த பல விதமான பாதைகள் தேவைப்படுகின்றன. 

எனவே நமது பாரத நாட்டின் யோகிகள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தவச்சீலர்கள், முனிவர் பெருமக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய அற்புத வழிகள் தான் இந்த யோகப் பாதைகள் ஆகும். ஒவ்வொருவரின் வயது, விருப்பம் மற்றும் ஆராய்ச்சித் திறனுக்கேற்ப பக்தியின் மூலமோ, அன்றாட ஒழுக்க வழக்கப் பயிற்சிகளான யோகா, தியானம் மற்றும் மந்திர உச்சரிப்பு என ராஜ யோக முறையின் மூலமோ, புனித நூல்கள் மூலம் ஆன்மீக அறிவைப் பெருக்கி, அறிவைப் பரப்பி ஞானயோகம் பயின்றோ, மக்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்கும் எல்லாவிதத்திலும் உதவி, தொண்டு புரிவதன் மூலம் கர்ம யோகப் பாதையில் வீறுநடை போட்டுச்  செல்வதன் மூலமோ எல்லாம் வல்ல தெய்வத்தின் பேரருளைப் பெறலாம், கடவுளைக் காணலாம், ஆண்டவருடன் பேசலாம். இறை சக்தி மர்மமான முறையில், நுணுக்கமாக செயல்படுவதை அறிவுக்கூர்மை மேம்பட்டு அனுபவத்தால் உணர்ந்து கொள்ளலாம்.


படிநிலைகள்
பக்தி யோகம் (Devotional service), ராஜ யோகம் (Exercises & Meditation), ஞான யோகம் (Philosophical Research), மற்றும் கர்ம யோகம் (Selfless service & Action) என்ற நான்கு வித வழிகள் இக் கட்டுரையில் உள்ள வலைப்பூ அமைப்பாளரின் விளக்கப் படத்தில் படிகள் போன்று உருவகப்படுத்தப் பட்டுள்ளன. இது ஏனெனில், துவக்கத்தில் வெவ்வேறு பாதைகளாய் தோன்றினாலும் நெடிய வாழ்க்கையில் - ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்லும் ஒருவர் இவை நான்கும் ஒன்றுக்கொன்று உதவியாய் அமைந்துள்ளதைக் கண்டு கொள்வார். ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்போடு உள்ளதைப் புரிந்து கொள்வார். இந்த நான்கில் எந்த ஒரு வழியினாலும் இறை அன்பைப் பெற முடியும் என்றாலும், இவற்றில் மேன்மை அதிகம் உடைய வழி கர்ம யோகமே. இதை நமது ஷீரடி சாயிபாபா பூவுலக வாழ்வில் தெளிவாக, செயல்முறை வடிவில் வாழ்ந்து காட்டியுள்ளார். அதாவது மக்களிடம் பக்திவழியினை (பஜன்கள், ஆடல்-பாடல், ஆரத்தி, இசை, பூஜை, கொண்டாட்டங்கள்) அனுமதித்தபோதும், பிரம்மச்சரிய ராஜயோகியாய் கடுந்தவத்தில் இருந்தபோதும், அனைத்து மதங்களின் ஆழ்ந்த தத்துவங்களை கரைத்துக் குடித்திருந்த பேரறிவு ஞான நிலையில் இருந்தபோதும், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்களுடன் கலந்து பழகி - நோயுற்றவர்கள், ஆதரவு அற்றோர்களுக்கு, ஆபத்தில் அவசரத்தில் உள்ளோருக்கு, உதவி தேவைப்படுவோருக்கு அற்புத முறையில் கர்ம யோகியாய் தினந்தோறும், இறுதி மூச்சு அடங்கி மகா சமாதி அடையும்வரை தொண்டாற்றினார். ஊர் உலகிற்காக கடுமையாக உழைத்தார். உதவியை வேண்டும் பக்தர்களை கைவிட்டு விடாது தொடர்ந்தும் உழைத்து வருகிறார்.

சாதாரண மனிதர்களில் ஒருவர் இறையுணர்வில் திளைத்து இருப்பவராக, பல யோகப் பயிற்சி வித்தைகளில் கை தேர்ந்தவராக, பற்பல புனித நூல்களைக் கற்றவராக இருக்கலாம். இவரால் - தனக்கும், தன் குடும்பத்துக்கும், ஒரு சில பேர்களுக்குமே பயன் இருக்கும். ஆனால் ஒரு தலைசிறந்த கர்ம யோகியால் இவ்வுலக மக்களுக்கே லாபம் கிட்டுகிறது. அத்தகைய கர்ம யோகி எவ்வித பிரதிபலனும் எதிர்பார்ப்பவராக இருக்க மாட்டார். அதாவது பிறரிடமிருந்து செய்நன்றி, பணம், புகழ், பதிலுதவி, செல்வம், செல்வாக்கு போன்றவற்றை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு இல்லாமல் சேவை செய்வதிலேயே அதிகம் மகிழ்ச்சியடைபவராய் இருப்பார். அந்த மனத் திருப்தியே அவருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கும். அந்த பொதுநலத் தொண்டில் மிகுந்த மன நிறைவு, இறைவனிடம் அதிகமான நெருக்கம், நிம்மதி, வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், பயன்பாடு, ஒரு தெளிவு - இவையெல்லாம் கிடைப்பதை உணர்ந்து கொள்வார். இத்தகைய கர்ம யோகம் பயில்பவர்- பால், நிறம், உயரம், தோற்றம், இனம், ஜாதி, ஜாதிப் பிரிவு, மொழி, மொழிப் பிரிவு, மதம், மதப் பிரிவு, மாவட்டம், மாநிலம், நாடு என எவ்வித வேற்றுமை உணர்வும் கொள்ளாது "இவ்வுலகமே ஒரே குடும்பம்" ('உதார சரிதானாம் து வசுதெய்வ குடும்பகம்' - உபநிஷத்) என்ற மனோபாவத்துடன் தொண்டாற்றுவார்.

இந்த மேன்மை மிகுந்த வழிகள், உத்திகள், கருவிகள், கலைகள், விளக்கங்கள், விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகள், ஆன்ம ரகசியங்கள் போன்றவற்றை உலகத்திற்கு அளித்ததுதான் இந்துக் கலாச்சாரத்தின் சாதனை. பெரும் அதிர்ஷ்டசாலிகளான இந்துக்கள் யாவரும் - இத்தகு யோகம் பயிலும் சாதாரண மனிதர்களின் தினசரி வாழ்வில் அன்றாட பிழைகள், தவறுகள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் ஏற்பட்டால் - இவற்றைப் பார்த்து மூல மெய்ஞானத்தை எடை போடக் கூடாது. சிறிதும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட இந்த வெற்றி வழிகளைத் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மூல நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டும். நமது பாரம்பரியத்தின் பெருமையை உணர்ந்து, அதைக் காத்திட தொண்டுகள் செய்து, உடல்-மன-ஆன்மீகப் பயிற்சிகள் செய்து, பக்திநெறியும் தழைக்கச் செய்ய வேண்டும். இந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையே ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
வாழ்க வளமுடன்...
 

ஓம் சஹஸ்ரநாம லக்ஷிதாய நமஹ:
ஆயிரங்கணக்கான பெயர்களால் அழைக்கப்படுபவரே போற்றி 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.