Total Pageviews

Thursday, March 27, 2014

Kanyakumari Saibaba Temple

கன்னியாகுமரி ஷீரடி சாயி கோவில் 




கன்னியாகுமரியில் அமைந்துள்ள புதிய, எழில்மிகு ஆலயமான ஸ்ரீ ஷீரடி சாயிபாபா திருக்கோவில் பிராணப் பிரதிஷ்டை விழாவும், அதை நடத்தி வைத்த உயர் திரு. டாக்டர் C.B. சத்பதிஜி அவர்களின் உரையும் 

- சாயி பக்தர்கள் காண வேண்டிய ஒளிக்காட்சி (Courtesy : Saumyaranjan Mishra )








Sai Mandir Videos

ஷீரடி சாயிபாபா ஆலய கும்பாபிஷேகம் மற்றும் இதர ஒளிக்காட்சிகள் 

1. வட அமெரிக்காவின் அட்லாண்டா மாநகர விக்ரஹ பிரதிஷ்டாபனா 



2. இங்கிலாந்தின் லெஸ்டர் சாயி கோவில் கும்பாபிஷேகம் 

  


3. புதிய இங்கிலாந்து ஷீரடி சாயி கோவில், டிராகுட், USA


4. டொரோண்டோ ஷீரடி சாயி மந்திர் பிராணப்ரதிஷ்டை, கனடா 


5. கோயம்புத்தூர் நாக சாயி ஆலயம் 



(Courtesy: Sai devotees- Prashant bytegraph, tsdilip, rOhiT BeHaL, TSSMSAI-S.Rao & Dev, Shri  Naga Sai Temple-Coimbatore)
சாயி சாயி சாயி.

Monday, March 24, 2014

Baba's Dress - part 6

சாயிபாபாவின் உடை - பகுதி 6

 

 "ஓ! இராம பக்த ஹனுமானே, பாபாவின் பக்தனாக இந்த சேவையை நான் செய்து முடிக்க சக்தியைக் கொடு" என்று வேண்டி மந்திரங்களை முணுமுணுக்கத் தொடங்கினார், திரு. ஜோதீந்திரா. அப்போது, குளியலறைக்குள் குளித்து முடித்திருந்த பாபா "அரே பாவ், ஏன் ஹனுமாரிடம் உதவி கேட்டு பிரார்த்தனை செய்கிறாய்?" என்று கத்தினார். இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா - ஓர் எங்கும் நிறைந்த சர்வ அந்தர்யாமி என்பது புலப்பட்டது. அதாவது இறைசக்தியாக எங்கும் நிறைந்து இருப்பதால் சிறிது தூரத்தில் நின்றிருந்த ஜோதீந்திராவின் உள்மனதில் ஏற்பட்ட எண்ணங்களைக் கூடத் துல்லியமாகப் படிக்க வல்லவராக இருந்தார் சாயிபாபா. சாயி பாபாவின் குரலைக் கேட்டவுடன் அங்கு சென்ற ஜோதீந்திரா தமது செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கோரினார். 

தமது செயலுக்காக அவர் பாபா முன்னிலையில் வருந்திய உடனேயே அவர் கையிலிருந்த கப்னியின் எடை மிகக் குறைவாக மாறியது. இதன் பிறகு பாபாவிடமிருந்து எவனும் எந்த சூழ்நிலையிலும் எதையும் மறைக்க முடியாது என்பதையும் திரு. ஜோதீந்திரா உணர்ந்து கொண்டார்.

பாபா அளித்த கப்னி (Photo Courtesy: Harihar Rautaray)
1918-ஆம் வருடம் காலஞ்சென்ற டாக்டர் கேஷவ் பகவந்த் கவான்கர், தனது 12-ஆம் வயதில் தன்னுடைய பெற்றோர் மற்றும் அத்தையுடன் ஷீரடிக்குச் சென்றார். சிறுவனான கவான்கரை அருகில் அழைத்து அமர வைத்த பாபா அவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார். அன்று கவான்கரிடமிருந்து இரண்டு பைசாக்கள் தட்சிணை கேட்டார். சிறுவன் கவான்கர் குழப்பமடைந்த நிலையில், அருகே நின்றிருந்த மாதவராவ் தேஷ்பாண்டே என்கிற ஷாமா அவனது கையை எடுத்து பாபாவின் உள்ளங்கையில் வைத்து, தட்சிணை "தரப்பட்டது" என்று கூறச் சொன்னார். சிறுவன் கவான்கரும் அப்படியே கூறினான். (இரண்டு பைசாக்கள் என்பது - பாபா மக்களிடம் எதிர்பார்த்த ஷ்ரத்தா மற்றும் சபூரி -அதாவது அசைக்கமுடியாத நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவையே). அதற்கு பாபா "எடுத்துக் கொள்ளப்பட்டது" என்று மறுமொழி பகர்ந்தார்.

 இதன்பிறகு சிறுவன் கவான்கருக்கு தமது கப்னி உடை ஒன்றைப் பிரசாதமாக அளித்தார். இந்த நிகழ்ச்சியின் அர்த்தத்தையும், நல்வாய்ப்பையும் பிற்காலத்தில் நன்கு உணர்ந்து கொண்டார், திரு கேஷவ் பகவந்த் கவான்கர். ஷீரடியில் பாபா அளித்த கப்னி உடை இன்றும் திரு.  கவான்கர் அவர்களின் மும்பை வீட்டில் அவரது குடும்பத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

இந்த வரலாற்றினை திரு. ஹரிஹர ரௌடாரே அவர்கள் இணையத்தில் விளக்கி எழுதி உள்ளார். அந்தக் குறிப்புகள் பின்வருமாறு:

' மும்பையைச் சேர்ந்த டாக்டர் திரு. சாயிநாத் கவான்கர் (64 வயது) இன்றும் சாயிபாபா தனது தகப்பனாருக்கு அளித்த தனிப்பட்ட பிரசாதமான- கப்னி உடையினைப் போற்றி பாதுகாத்து வருகிறார். இவரது தந்தைதான் டாக்டர் கேஷவ் பகவந்த் கவான்கர் அவர்கள். இவர் ஹரிஹர் ரௌடாரேயிடம் கூறியது: " இந்த உடை ஷீரடி சாயி பாபாவினால் எனது அப்பா திரு. கேஷவ் ப. கவான்கருக்கு 1918-இல் கொடுக்கப் பட்டதாகும். பாபா என்றும் அழியாத சமாதி நிலை அடைவதற்கு சில மாதங்கள் முன்னால், எனது தந்தை 12 வயது சிறுவனாக இருந்த போது ஷீரடியில் பாபா பிரசாதமாக-பரிசாக அளித்தார். 

திரு கேஷவ் அவர்கள் ஏப்ரல் 28, 1906-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அர்னாலா மீன்பிடி கிராமத்தில் பிறந்தார். கேஷவிற்கு ஏழு வயதிருக்கும் போது இதயத்தில் கடும் வலி கண்டு சுரம் வியாதியுடன் இருந்தார். அந்நாட்களில் அறுவைச் சிகிச்சை தவிர எந்த வியாதிக்கும் அதிக மருந்துகள் கிடையாது. கேஷவ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான யெஷ்வந்த்ராவ் கல்வான்கர், ஒரு சிறந்த சாயி பக்தர். அவர் கேஷவ்வின் குடும்பத்தாருக்கு தக்க அறிவுரை வழங்கி ஷீரடி சாயிபாபாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து, பாபாவின் லீலைகளை (அவர் நிகழ்த்தும் அதிசய நிகழ்ச்சிகளை) எதிர்பார்த்து இருக்கும்படியும் கூறினார். 

கேஷவ்வின் அத்தை திருமதி. தாமாபாய் அவர்கள் 'கேஷவ் குணமடைந்து விட்டால் ஷீரடிக்குச் சென்று ஒரு பாக்கெட் இனிப்பு பேடாக்கள் சாயிபாபாவுக்கு நேர்த்திக் கடனாக அளிப்பதாக' வேண்டிக் கொண்டார். மறுநாளே அதிசயத்தக்க விதத்தில் கேஷவ் பூரண குணம் அடைந்து படிப்பைத் தொடர, தனது மராத்திப் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். கேஷவ் குடும்பத்தினர் பாபாவிடம் வேண்டிக் கொண்டபடி நடந்து கொண்டார்களா? பாபாவின் ஆசியை அவர்கள் பெற்றது எவ்வாறு? கப்னி உடையை பாபாவிடமிருந்து நேரடியாகப் பரிசாகப் பெற்ற சிறுவன் கேஷவ் பிற்காலத்தில் எவ்வாறு புகழ் பெற்று விளங்கினார்? அடுத்த பகுதியில் மேலும் தொடர்ந்து காண்போம்.

(தொடரும்)

Thursday, March 13, 2014

Shirdi Maha Shivaratri

ஷீரடியில் மஹா சிவராத்திரி விழா 2014


ஷீரடியில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வியாழக் கிழமை அன்று மஹா சிவராத்திரி விழா கொண்டாடப் பட்டது. ஷீரடியில் ஆயிரங்கணக்கான பக்தர்கள், தாங்கள் சிவ அவதாரமாகவே கருதும் சாயிபாபாவைத் தரிசிக்கக் கூடினர். இந்த நன்னாளில், ஷீரடி சாயி பாபா சன்ஸ்தானத்தினரால் ஸ்ரீசாயி பிரசாதாலயாவில் அனைத்து பக்தகோடிகளுக்கும் சுவைமிகு "சபுதனா கிச்சடி"ப் பிரசாதம் இலவசமாக வழங்கப் பட்டது.  




இந்த நன்னாளில் பக்தர்கள் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பினைக் கருத்தில் கொண்டு சிறப்பாகத் தயாரிக்கப் பட்டது, இந்த கிச்சடி. இந்த உணவு 7000 கிலோ சபுதனா (ஜவ்வரிசி), 3000 கிலோ நிலக்கடலை மற்றும் 1000 கிலோ நெய் கொண்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் ப்ரசாதாலயா ஊழியர்கள்  உட்பட, சுமார் 70,000 பக்தர்களுக்கு உணவளிக்கவே தயாரிக்கப்பட்டது. 

Saturday, February 15, 2014

Baba's Dress- part 5

சாயிபாபாவின் உடை -- பகுதி 5

  
திரு. தத்யா சாஹேப் நூல்கர், தனது ஷீரடி விஜயத்தைப் பற்றியக் குறிப்புகளில் தான் பாபாவிடமிருந்து அவர் உடையினை பிரசாதமாகப் பெற்றதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள், சாவடியின் ஒரு தூண் அருகில் திரு. அப்பா கோட்டே வந்து நின்றார். அவர் தமது கை விரல்களில் ஒரு கந்தல் துணியினைச் சுற்றிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட நூல்கர் அவரின் விரல்களில் ஏதேனும் அடிபட்டு இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு திரு. அப்பா கோட்டே- இல்லை, இது சாயிபாபாவின் உடையான கப்னியின் கிழிந்த ஓர் பகுதியாகும் என்று கூறினார். அப்பா கோட்டேவை 'நீங்கள் ஏன் கிழித்தீர்கள்'? என்று நூல்கர் கேட்டார். 

அதற்கு கோட்டே, பாபா விளக்குகளை எரிய வைப்பதற்காகத் திரி போல கப்னி உடையின் பகுதியைக் கிழித்துப் பயன் படுத்தியதாகவும், ஒரு சிறிய துண்டு தொங்கிக் கொண்டு இருந்ததாகவும், அந்த துண்டினையே தாம் எடுத்து வந்து விரல்களில் சுற்றிக் கொள்வதாகவும்' கூறினார். திரு. அப்பா கோட்டே பாபாவிடம், தம் உடையின் ஒரு சிறிய பகுதியாவது அன்புப் பரிசாக வைத்துக் கொள்ளத் தருமாறு வேண்டியதாகவும், அதுவே அவருக்குக் கிடைத்த அந்தத் கந்தல் துண்டுப் பகுதி என்றும் கூறி மகிழ்ந்தார். இதைக் கேட்ட நூல்கருக்கு பாபா தமது கையால், நூல்கர் கேட்காமலேயே ஒரு கப்னி பரிசாகத் தரப்போகின்றார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.


ஒருநாள் நண்பகல் வேளையில் பாபா, திரு. நூல்கரை துவாரகாமாயிக்கு வரவழைத்தார். உடனே ஓடோடிச் சென்றார், நூல்கர். அப்போது பாபா, தமது உடையினைக் கழட்டி நூல்கரிடம் அளித்துப் பின்வருமாறு கூறினார். " இதை வைத்துக் கொள். கடுங்குளிர் காலத்தில் இரவு வேளைகளில் இந்த உடை உன்னைக் கதகதப்பாக வைத்திருக்கும்" என்று கூறினார். கேட்காமலேயே அருள் புரிந்த பாபாவின் ஆசிகளைப் பெற்ற நூல்கரின் அதிர்ஷ்டம்தான் என்னே! இந்த அனுபவம், பாபா எவ்வாறு பிறர் மனத்தினை படிக்க வல்லவர் என்பதையும், எங்கும் எப்போதும் நிறைந்துள்ள பாபாவின் தெய்வீக சர்வ வியாபகத் தன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. 

சாயிபாபாவின் மேலும் ஒரு திருவிளையாடலைக் காண்போம். திரு. ஜோதீந்திரா தார்கட் தனது சிறு வயதிலிருந்தே பாபாவின் மிகச்சிறந்த பக்தராக விளங்கினார். அவரின் குடும்பம் பல்வேறு வியக்கத்தக்க அனுபவங்களை பாபாவினால் அடைந்து வந்தது. தந்தை-மகனைப் போன்ற பாசமிக்க உறவு, பாபாவுக்கும் திரு. ஜோதீந்திராவுக்கும் இருந்துவந்த காலத்தில் ஒரு நாள் ஷீரடிக்கு தார்கட் குடும்பம் வந்திருந்த சமயம்.. பிரதிபலன் பாராது பாபா இட்ட வேலைகளைச் செய்ய திரு. ஜோதீந்திரா விருப்பத்துடன் இருந்தார். 

அப்போது ஒரு நாள் பாபா, திரு. ஜோதீந்திராவிடம் தாம் லெண்டி பாக் (பூங்கா) கிற்குக் குளிக்கச் செல்வதாகக் கூறி, ஜோதீந்திராவிடம் ஒரு வேலையை செய்யுமாறு பணித்தார். அப்போது பாபா கூறியதாவது, "எனக்கு குளிப்பது சிரமமான காரியம் அல்ல. ஆனால் என் ஆடையினைத் துவைக்க வேண்டும். அதற்கு என் கப்னியைத் தருகிறேன். அதை நீ கிணற்றுக்கு எடுத்துச் சென்று நீரில் நன்கு அலசித் துவைக்க வேண்டும். குளித்து முடித்து நான் வருவதற்குள் என் ஆடை காய்ந்து உலர்ந்து விடலாம். நான் குளியலை முடிப்பதற்கு வெகு நேரம் எடுக்கும் என்பதை நீ அறிந்துள்ளமையினால் அந்த இடைவெளியில் துணியைக் காய வைத்துவிடு. ஆனால் துணியை மண் தரையிலே போட்டு இழுத்துப் பரப்பிக் காய வைக்கக் கூடாது. அகலமாகக் கையில் பிடித்தபடி துணியை உலரவைக்க நின்று கொள் " என்று கூறிவிட்டார். பாபா அந்த காலகட்டத்தில், கடுந்தவம் இயற்றும் ராஜயோகியாய், அகச்சுத்தம் மற்றும் புறச்சுத்தத்துடன் பல்வேறு யோகக் கிரியைகள் செய்து குளித்து முடித்து தமது இருப்பிடம் திரும்ப வெகு நேரம் ஆகும். ஆதலால் பாபாவுக்குப் பணிவிடை செய்ய விரும்புபவர், பணியை ஏற்றுக் கொள்பவர் மிகுந்த பொறுமை மற்றும் நிதானம் உடையவராக இருத்தல் வேண்டும். பாபாவின் கட்டளையை ஏற்றுக் கொண்ட ஜோதீந்திரா, கூடவே லெண்டி பாக் சென்றார்.

லெண்டி பூங்காவில் தகரத் தகடுகளால் வேயப்பட்ட ஒரு குளியலறையும், பாபா அமர்ந்து குளிப்பதற்கு ஓர் செவ்வக வடிவ கல்லும் இருந்தன. பாபா கூறியதை கேட்டுக் கொண்ட ஜோதீந்திரா, "பொதுவாக பிறரை வாழ வைக்க எவரையும் எதிர்பார்க்காமல் கடுமையாக, தானே உழைப்பதை விரும்புபவரான பாபா காரணமில்லாமல் இது போல் வேலை வாங்க மாட்டார் என்பதினால், இதில் ஏதோ ஒரு படிப்பினை நமக்கு இருக்க வேண்டும்" என்று மனதிற்குள் யூகித்தார். பாபா அறைக்குள் குளிக்கச் சென்றவுடன் கப்னியை பெற்றுக் கொண்ட ஜோதீந்திரா கிணற்றடியில் அலசி, துவைத்து கைகளில் ஏந்திப் பிடித்துக் கொண்டு பாபா கூறியவாறு வெயிலில் காயவைத்துக் கொண்டு நின்றார். 

நேரமோ ஆகிக் கொண்டே இருந்தது. பாபா இன்னும் குளியலை முடிக்கவில்லை. வியர்த்து விறுவிறுத்து, சிறிது சிறிதாக பொறுமை இழக்க ஆரம்பித்தார், ஜோதீந்திரா. தெய்வத்திற்கு பணிவிடை செய்வதைவிட குருவுக்குப் பணிவிடை செய்வது அதிக சவாலானது. மாபெரும் சித்தர், ரிஷி முனிவர் போல் காட்சியளித்தாலும் - சிவ அவதாரமாகவே விளங்கிய பாபாவுக்குப் பணிவிடை செய்வதில் பெரும் சிரத்தை, பக்தி, விருப்பம், தொண்டு மனப்பான்மை, விவேகம், பொறுப்புணர்வு - இவையெல்லாம் மிக முக்கியம் அல்லவா? 'சாயி மஹராஜ்' என்று அழைத்து பாபாவுக்குப் பணிவிடை புரிந்து அவர் ஆசிகளைப் பெற்றுக் கொள்ள, பல நூறு பேர் விரும்பிய அந்நாட்களில், அவர் அருகாமையில் சாதாரணமாகப் பேசிக் கொண்டு இருக்கக் கூடிய அதிர்ஷ்டம் இருந்தவர்கள் மிகச் சிலரே. 

ஆனால் அவசர புத்தியுடன் பொறுமை முற்றிலும் இழந்த ஜோதீந்திரா 'இவ்வளவு மணி நேரங்கள் ஆகியும் பாபா குளியலை முடிக்கவில்லையே என்று பதட்டத்துடன், கைகளில் கப்னியுடன் குளிக்கும் இடம் அருகே சென்று எட்டிப் பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை பேச்சு இழந்து, ஓர் புரியாத மந்திர சக்தியில் கட்டுண்ட நிலையைத் தந்தது. ஜோதீந்திரா தனது கண்கள் குருடாகிவிடுமோ என்று பயப்படக்கூடிய அளவிற்கு உள்ளே, பாபா அமர்ந்திருந்த இடத்தில் கண்கூசும் வெளிச்சத்துடன் மிகப் பிரகாசமான சூரியப் பிழம்பாக பேரொளி தெரிந்தது. இதைக் கண்டு மிரட்சியுடன், பாபா கூப்பிடுவதற்கு முன், தான் வந்துவிட்ட முட்டாள்தனமான தவறினைக் கண நேரத்தில் உணர்ந்து சுதாரித்துக் கொண்ட ஜோதீந்திரா, மீண்டும் தனது இடம் சென்று பாபா அழைக்கும்வரை காத்திருக்க ஆரம்பித்தார். அதே நேரத்தில், தனது ஆடை காய்ந்துவிட்டிருந்தால் எடுத்து வருமாறு பாபா குரல் கொடுத்தார்.

அப்போது ஜோதீந்திரா, தனது கைகளில் ஈரமான ஆடையை உலர்வதற்காகப் பிடித்திருந்தார் அல்லவா? உச்சி வெய்யிலில், அந்த ஆடை அவ்வளவு நேரம் ஆகியும் காயவில்லை. சீக்கிரம் காயவைப்பதற்காகத் தன் தலைக்கு மேல் இரு கைகளிலும் ஆடையை சூரியனை நோக்கி, தூக்கிப் பிடித்தபடி நின்றார், ஜோதீந்திரா. பாபாவின் கப்னியை, இந்நாட்களில் ஷீரடி செல்லும் பாக்கியம் பெற்றவர்கள் - அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் பார்த்திருப்பார்கள். மிகப் பெரிதாக ஒரு ரஜபுத்திர அரசரின் உடை போல் கம்பீரமாக, பெரிய அளவில் அது இருக்கும். நிச்சயம் அந்த முரட்டுத் துணியின் எடையும் அதிகமாகத்தான் இருந்திருக்கும். இந்த நிலையில் நேரம் செல்லச் செல்ல அந்த ஈரத் துணியின் எடை அதிகரிக்க ஆரம்பித்தது. 

வெயிலில் துணி காய்ந்து எடை இலேசாக மாறுவதற்குப் பதிலாக கருங்கல் போல் கனக்க ஆரம்பித்தது. இதனால் பயந்துபோன ஜோதீந்திராவினால் அதை சுமக்க முடியவில்லை. எடை அதிகரிக்க, அதிகரிக்க அவரின் கைகள் வலியில் கடுக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அவரின் கைகள் கடுமையாக வலிக்கவே, ஜோதீந்திரா- தான் கீழே விழுந்து விடுவோமோ, துவைத்த துணி கீழே மண்ணில் விழுந்து விடுமோ என்று எண்ண ஆரம்பித்தார். இந்த அதிசயமான, விசித்திர நிகழ்ச்சியால் பயந்த ஜோதீந்திரா வேறு வழி எதுவுமின்றி, தாம் ஏற்றுக் கொண்ட இப்பணியினை முடிக்க தம் இஷ்ட தெய்வமான ஸ்ரீ ஆஞ்சநேயரை மனதிற்குள் வேண்டினார். அந்த எடையினைத் தாங்குவதற்கு அதிக பலம் வேண்டி ஹனுமாரை மனதிற்குள் வேண்டியபடி "     இலங்கையை எரித்த ஸ்ரீ ஹனுமானே, இந்த சேவையை செய்து முடிக்க பெரும் பலத்தினைக் கொடு.  ஓ! இராம பக்த ஹனுமானே, பாபாவின் பக்தனாக இந்த சேவையை நான் செய்து முடிக்க சக்தியைக் கொடு  " என்று வேண்டி மந்திரங்களை முணுமுணுக்கத் தொடங்கினார். அப்போது . . .

(தொடரும்)