சீரடி சர்ப்ப சாயிநாதரின் அருள்மொழிகள்
* உன் மனதினால் என் அருளைப் பெறலாமே வொழிய உன் பணத்தினால் விலைக்கு வாங்க முடியாது. அதை பணத்திற்கு நீ மற்றோர்க்கு விற்கவும் உன்னால் முடியாது.
* உனது தாய் தந்தையர் உனது கல்விக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவு செய்யலாம். அவர்கள் உனக்காக பரீக்ஷையும் எழுத முடியுமா? அதைப் போன்றுதான் நீ நன்றாயிருக்க உன் முயற்சியும் வேண்டும், என் அருளும் வேண்டும். உனது கண்களுக்கு பார்க்கும் சக்தியிருந்தும் சூரியன் அல்லது தீபத்தின் ஒளியின் சகாயமின்றி எதையேனும் பார்க்க முடியுமா? அதைப்போலவே எதிலும் உன் முயற்சியும் வேண்டும், இறைவன் அருளும் வேண்டும்.
* எந்தக் காரணத்தை முன்னிட்டேனும் எள்ளளவேனும் அகந்தை கொள்ளாதே. அகந்தை அழிவுக்குக் காரணம்.
* கேணியில் இறைக்க இறைக்க தெளிவான நீர் ஊற்றெடுப்பது போல் தர்மத்திற்காகச் செலவிடும் ஒவ்வொரு பைசாவும் உனக்கு ஒவ்வொரு பவுனாகத் திரும்பும்.
* சமாதி என்பதற்குச் சாவு என்று பொருளல்ல. நான் சமாதியடைந்த பிறகும் என்றும் உனக்கு எனது அருள் கிட்டும். வேற்றுடல் தரித்து வெளிவந்துலவி உனக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்தே தீருவேன்.
* நானே கணபதி, நானே முருகன், நானே சிவன், நானே ராமன், நானே கிருஷ்ணன், நானே ஹனுமான், நானே இலக்குமி, நானே இராஜ ராஜேஸ்வரி. இது மட்டுமா? எல்லாம் யானே.
--- சீரடி சர்ப்ப சாயிநாதரின் அருள் மொழித் திரட்டு எனும் அரிய நூலில் இருந்து.
இந்நூலைத் தொகுத்தவர் : ஸ்வாமி வேதானந்தா. பிரசுரித்தவர் : தி.அ. சஷ்டி கணேசம் பிள்ளை, கணபதி மந்திரம், ஆண்டார் வீதி, தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளி
************
(புண்ணிய பூமியான பாரத தேசத்திலே, கடந்த பல யுகங்களில், மஹா விஷ்ணு-சிவன்-ப்ரம்மா என மூன்று தலைகளுடன் ஒரே உடலாக எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஏக இறை வடிவாக - அனைத்து குரு, முனிவர், சித்தர், ரிஷி, யோகிகள், ஞானிகள் - எல்லோருக்கும் ஆதி குருவாகிய ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரங்களில் ஒன்றாக வாழையடி வாழையாகத் தோன்றியவர் ஷீரடி சாயி பாபா என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் சாயி மார்க்கத்தில் எந்த வித பேதமும் இல்லை)
"ஸப்கா மாலிக் ஏக்"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.