Total Pageviews

Saturday, October 11, 2014

Keerthan Sankeerthan - part 2

*கீர்த்தன்- சங்கீர்த்தன்* தொடர் - பகுதி 2



7. சங்கீர்த்தனத்தின் பிற பெயர்கள் யாவை?

பஜன், பஜனை, பக்தி சங்கீத குழு இசை, பக்தி கோஷ்டி கானம் என்று கூறலாம்.

8. சங்கீர்த்தனத்தில், வரலாற்றில் தலை சிறந்து விளங்கியவர்கள் யாவர்?

நாரத மாமுனிவர், தும்புரு கந்தர்வர், இராமபக்த ஹனுமார், பக்த ப்ரஹலாதர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், இதர நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷி சுகதேவர், மீராபாய், ஆண்டாள், அருணகிரிநாதர், கபீர்தாஸ், துளசிதாஸ், சுவாமி சிவானந்தர், கிருபானந்த வாரியார் சுவாமிகள், குருநானக், தாஸ்கணு மஹராஜ், தர்மபுரம் சுவாமிநாதன், எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.பி.சுந்தராம்பாள், பெங்களுரு ரமணி அம்மாள், பித்துக்குளி முருகதாஸ், வீரமணி மற்றும் பலர்.

9. சங்கீர்த்தனத்திற்கு உதவும் இன்னிசைக் கருவிகள் என்னென்ன?

தோலக் (Dholak), உடுக்கை (Dumroo), கஞ்சிரா (Kanjeera), சலங்கை (Ghungroos), மிருதங்கம், தாள், கடம் (Ghatam), தபலா, கோல் (Khol), மஞ்சீரா அல்லது ஜால்ரா (Manjeera), பக்கவாஜ் (Pakhawaj), பன்சூரி (Bansuri), ஹார்மோனியம், வீணை, தம்புரா, புல்லாங்குழல், ஜலதரங்கம், சிதார்,சுருதிப் பெட்டி, மற்றும் முக்கியமாக கர்தால் (Kartal) அல்லது சாப்ளாக் கட்டை.

10. சங்கீர்த்தனத்திற்கு வேண்டிய தகுதிகள் யாவை?

உண்மை சாயிபக்தி, விசுவாசம், பொறுமை, முழுமையான ஈடுபாடு, நல் நம்பிக்கை, இசையில் ஆர்வம், குழு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சி.

11. எல்லோராலும் சங்கீர்த்தனம் செய்ய இயலுமா? இதற்கென தனி பயிற்சி, குரல் வளம், இசைக் கருவிகளில் திறன், சங்கீதப் பயிற்சி இவை வேண்டுமே ?

சங்கீர்த்தனம் அல்லது பஜனையின் சிறப்பம்சமே பொது மக்கள், பக்தர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எவ்வித கூச்சமோ, பயமோ, தயக்கமோ இல்லாமல் பங்கு பெற முடிவதுதான். இதற்கு ஓரளவு குரல் வளம், எளிமையான பாடல்கள், பாட்டு புத்தகங்கள், கர்தால் போன்ற அடிப்படைக் கருவிகள் இவை இருந்தாலே போதுமானது. "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி" போன்ற மஹா மந்திரங்கள் மட்டும் கூட போதுமானது. இந்த சங்கீர்த்தனம் அல்லது அகண்ட நாம சங்கீர்த்தனத்தில் ஒலித்தட்டு போல ஒரே ராகத்தில் திரும்பத் திரும்ப பாடாமல், வெவ்வேறு விதமாய் முயற்சித்தால் சுவை கூடும். குழுவினரின் மனமும், ஒருமுகமாய் கவனம் சிதறாது உற்சாகமாய் இருக்கும்.

வியாழன் தோறும் வீடுகளிலோ, பக்தர்கள் கூடும் சாயி மந்திர் அல்லது கோவில் சத்சங்கங்களிலோ, பொது சபைகளிலோ, எளிமையான முறையில் திட்டமிட்டு யாவரும் செய்யலாம். ஓரளவு பாடத் தெரிந்தவர்கள் முன்னெடுத்துச் செல்லலாம். எந்த திறமையும் கூடுதலாக இல்லாவிடினும் சாப்ளாக் கட்டை, மஞ்சீரா போன்ற சிறிய கருவிகளை வைத்துக் கொண்டே கூட, குழுவாக ஒன்று கூடி இசைத்து இன்புற்று பாபாவின் அருள் பெற்று மகிழலாம்.

12. சங்கீர்த்தனத்தால் கிடைக்கும் இதர நன்மைகள் யாவை?

- கவலைகள் மறந்து போகுதல் (Forgetting the Worries)
- மனதிற்கு ஓர் மாற்றமும், புத்துணர்ச்சியும் (Relaxation and Change)
- ஆண் பெண் இளைஞர், சிறுவர், சிறுமியர்க்கு நற்பழக்கம், மென் திறன்- சமுதாய திறன்கள் வெளிப்பாடு மற்றும் திறன் மேம்பாடு, மன ஓர்மை கிடைத்தல் (Good habits-Soft skills-People skills-Social skills development)
- குழு ஒற்றுமை உணர்வு (Team cohesiveness)
- உள்ளங்கைகள் அழுந்த கைதட்டிக் கொண்டே பாடுவதால் அல்லது ஆடுவதால் வர்மப் புள்ளிகள் நன்கு இயங்கப் பெற்று ஆரோக்கியம் அடைதல்
- ஆத்மார்த்தமான சங்கீர்த்தனத்தால் ஆக்க பூர்வமாக நேரம் செலவாவது (Creative Satisfaction and Entertainment)
- இதர சாயி பந்து ('Bha'nthu)க்களை அதாவது நம் சாயி சொந்தங்களைச்  சந்தித்து உரையாடும் வாய்ப்பு
- ஜாதி, பால், இனம், மதம், மொழி, துவேஷங்கள், வேறுபாடுகள் ஏதும் இல்லாமல் நட்பு உணர்வும் ஒற்றுமையும் ஏற்படுதல் (Unity and Harmony)
- உச்ச ஸ்தாயியில் (உரத்த குரலில்) கூட்டத்துடன் ஒன்றிணைந்து பாடும்போது நேரம், காலம், மனக் கவலை, துன்பம், வருத்தம், துயரம், பதட்டம், பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் சிறிது நேரமேனும் விடுபட்டு வழிபாட்டின் உன்னத நிலையைத் தொட முடிவது
- பஜனை முடிந்தபின் மனம் லேசாக, மனப் பளு அல்லது மன அழுத்தம் குறைய வாய்ப்பு
- ஆர்வமுடைய நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உற்றார், ஊர்மக்கள், முதியோர் என அனைவரும் பங்கு பெறும் வகையில் இம் முறை இருப்பது
- சாயி பந்துக்கள் அவ்வப்போது சந்திக்கும் வேளையில் அரசியல்- வம்பு-வேடிக்கை-விவாதப் பேச்சிற்கு இடமின்றி சாயிபாபாவைப் பற்றியோ, சொந்த பிரச்சினைகளைப் பற்றியோ (பஜனை முடிந்த பின் அல்லது வேறு நேரத்தில் மட்டும்) பிறரிடம் கலந்தாலோசித்து தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும்கூட வாய்ப்பாக அமையலாம்.
- எல்லாவற்றுக்கும் மேலாக சாயி நாம சங்கீர்த்தனமும், சாயி பெயரை உச்சரித்து நாம ஜெபமும் செய்வதே ஒரு பெரும் பாக்கியமாகும் (Real devotion, dedication, singing the glory of god, celebrating in a joyful way) அதன் பயன்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவத்தால் மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

(தொடரும்)










(Videos Courtesy: kvnvasu)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.