Total Pageviews

Tuesday, October 28, 2014

Baba's Dress - part 8

சாயிபாபாவின் உடை - பகுதி 8   


ன்பர்களே, சாயிபாபாவின் உடை பற்றிய பல்வேறு விஷயங்களை இத் தொடரிலே நாம் பார்த்து வருகிறோம். இவற்றில் நாம் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது திரு. H.S. தீட்சித் அவர்களைப் பற்றியே. இவர் கட்டிய தீட்சித் வாடா கட்டிடத்திற்கு அருகில்தான் தீட்சித் வாடா மியூசியம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில்தான் நாம் பாபாவின் கப்னி உடையினை இன்றுகூட கண்டுகளிக்க முடிகிறது. இவர் போன்ற பக்தர்களினால்தான் நமது காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் மக்கள் பாபாவின் சொந்த உடைமைகளை கண்ணால் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் வளாகத்தின் நடுவே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் பாபாவின் மிக அரிய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள், உடை, காலணிகள், கிராமபோன் ஒலித்தட்டுகள், சிலிம் புகைபிடிக் குழாய், தண்ணீர் டம்ளர்கள், குளிக்கும்போது அமரும் கல், சமையல் பாத்திரங்கள் போன்றவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

காகா என்றழைக்கப்பட்ட திரு. ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்களின் பிற பெயர்கள் காகா தீட்சித், காகா சாஹேப் தீக்ஷித், தீக்ஷித் போன்றவை ஆகும். அவர் 1864-இல் கந்த்வாவில் பிறந்தார். மும்பை உட்பட பல்வேறு இடங்களில் படித்து சட்டப்படிப்பில் தேறினார். வழக்கறிஞர் ஆகவும் பணியாற்றி புகழ் பெற்றார். அரசியலில் சட்ட மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கட் தொண்டாற்றினார். 


திரு.காகாவும், திரு.நானா சாஹேப் சந்தோர்க்கர் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்களாவர். 1906-இல் காகா இலண்டன் மாநகரத்தில் ஒரு நாள் இரயில் வண்டியில் ஏறும் போது கால் தவறி நடை மேடையில் விழுந்து விட்டார். கால் காயம்பட்டு நொண்டி நடக்க ஆரம்பித்தார். உள்காயம் பலமாக இருந்ததால் நரம்பு சுளுக்கு ஏற்பட்டு இருந்தது. இதனால் அவரால் நேராக நடக்க இயலவில்லை. இலண்டனில் சிறந்த மருத்துவ சிகிச்சைகள் பல எடுத்தும் அவரால் குணமடைந்து நேராக நடக்க முடியவில்லை. பிறகு 1909-இல் லோனாவாலாவிற்கு விடுமுறைக்காக சென்ற காகா தீட்சித் தனது பங்களாவில் தங்கினார். அங்கு தனது வகுப்புத் தோழனான நானா சாஹேப்பைச் சந்தித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு நானா சாஹேப் அரசாங்க உத்தியோகத்திலும் காகா சாஹேப் தனது சொந்த வக்கீல் தொழிலிலும் பணி புரிந்தனர். லோனாவாலாவில் அவர்கள் சந்தித்த பின் பல வருடங்களுக்குப் பிறகு நானாவின் அறிவுரைப் படி தீட்சித் ஷீரடிக்குச் செல்ல விரும்பினார். அப்போது காகா தனது மற்றொரு நண்பர் திரு.மிரீகர் உடன் அஹ்மத் நகரில் தங்கி இருந்தார். அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தனது மாமியாரைப் பார்க்க திரு.ஷாமாவும் அஹ்மத் நகர் வந்திருந்தார். இதை அறிந்த மிரீகர், ஷாமாவின் மூலம் திரு.காகா ஷீரடி செல்ல ஏற்பாடு செய்தார்.

திரு.ஷாமாவுடன் திரு.காகா ரயில் நிலையம் அடைந்தபோது ரயிலில் பயணிக்க இடம் இல்லாத நிலையில் தனக்குத் தெரிந்த அதிகாரியின் உதவியால் முதல் வகுப்பில் இடம் பெற்றுப் பயணம் செய்ய ஆரம்பித்தார், காகா. அவர்கள் இருவரும் கோபர்காவன் சென்றடைந்தபின் நானாவைச் சந்தித்தனர். பின்பு மூவரும் ஷீரடி போய்ச் சேர்ந்தனர். முதன் முறையாக 02-11-1909 அன்று காகா ஷீரடிக்கு வந்து பாபாவின் தரிசனம் பெற்று பெருமகிழ்வடைந்தார். காகாவின் வருகைக்காக தாம் காத்திருந்ததாகவும் அவரை அழைத்துவரவே ஷாமாவை- தான் அனுப்பி இருந்ததாகவும் சாயிபாபா அவரிடம் கூறினார்.

ஷீரடி, லோனாவாலா, மற்றும் மும்பையில் உள்ள விலே பார்லே ஆகிய இடங்களில் இருந்த தனது வீடுகளுக்கு காகா தீட்சித், தமது நண்பர்களை மட்டுமல்ல, முன்பின் தெரியாத வழிப்போக்கர்களைக் கூட இலவசமாக உணவருந்த அழைத்த வண்ணம் இருந்தார். இதன் விளைவாக காகாவின் லோனாவாலா வீடு "அன்னதான ஹிந்து ஹோட்டல்" என்றழைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு இருந்த ஹோட்டல்களின் வியாபாரம் தொடர முடியவில்லை. பாபாவின் உண்மை பக்தரான காகா, தமது விலே பார்லே வீட்டிலும் கூட பாபாவின் அடியொற்றி அன்ன தானம் செய்து, பூனைகள்-நாய்களுக்கும் கூட தடையேதுமின்றி பெருந்தன்மையுடன் தொடர்ந்து உணவளித்து வந்தார். ஷீரடியில் வசிப்பதற்கு கட்டிடங்கள் கட்ட 09-12-1909 அன்று பாபாவிடம் அனுமதி பெற்றார், காகா. கட்டிட வேலைகளையும் உடனே தொடங்கினார். அந்தக் குடியிருப்புக் கட்டிடங்கள் 1911-இல் முழுமை பெற்றன. அன்று கட்டப்பெற்ற முதலாவது கட்டிடமான தீட்சித் வாடா-வின் பழைமையான புகைப்படம் கீழே:


பாபா நிகழ்த்திய அற்புதச் செயல்களை தீட்சித் தனது மராத்தி நாட்குறிப்பு நூலில் விரிவாக பதிவு செய்து உள்ளார். 1909 முதல் 1918 வரையிலும், 1918 முதல் 1926 வரையிலும் காகா அவர்கள் எழுதிய குறிப்புக்கள் "தீக்ஷித்தின் டயரிக் குறிப்புக்கள்" என நூலாகவே வெளி வந்துள்ளது. ஷீரடியில் தங்கி இருந்த சமயம் ஒரு நாள் பாபா தமது கப்னி உடையினைப் பிரசாதமாக காக்காவுக்கு அளித்திருந்தார். ராமநவமி அன்று திறக்கப் பட்ட தீட்சித் வாடா, குருஸ்தானுக்கு எதிரே அமைந்துள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் ஓர் எளிமையான அறையில் தங்கி இருந்த காகா தீட்சித், மற்ற எல்லா இடத்தையும் ஷீரடி வரும் பக்தர்கள் இளைப்பாறக் கொடுத்து விட்டார். இவ் வாடாவில் தினமும் பூஜைகள் நடக்கும். இதே வாடாவில்தான் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எழுதிய திரு. ஹேமத்பந்த் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் தங்கினார். 1990-ஆம் ஆண்டு வரை இக் கட்டிடம் 'போஜன் க்ரிஹா' அல்லது உணவுக்கூடமாக பயன்படுத்தப் பட்டது.                                                                    

இதன் சிறு பகுதி புத்தகங்களை படிக்கும் அறையாகவும், பிறகு பாபா பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய காட்சிக் கூடமாக (Museum Hall ) வும் பயன் படுத்தப் பட்டது. பூட்டிவாடாவில் பாபாவின் சமாதி அமைவதிலும், 1922-இல் சாயிபாபா சன்ஸ்தான் அமைப்பிலும், பெரும் பங்காற்றிய காகா அவர்கள் 1923-இல் "சாயி லீலா" மராத்திப் பத்திரிக்கையையும் தொடங்கினார். திரு. காகா சாஹேப் ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்கள் ஜூலை மாதம் 1926-இல் சாயி இறைவனடி சேர்ந்தார்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் சாயி பாபா அணிந்திருந்த அதே உடையினை ஷீரடி செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் கண்டுகளியுங்கள்.

(இத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.