Total Pageviews

Sunday, November 10, 2013

Baba's Dress - part 2

சாயிபாபாவின் டை -- பகுதி 2

 ஷீரடி சாயிபாபாவின் கப்னியோ, அல்லது அவரின் இலங்கோடு என்னும் இடுப்புக் கச்சையோ பழையதாய்ப் போனால், கிழிந்து போனால் அவற்றை பாபா எவருக்கும் கொடுத்ததில்லை. மாறாக, துனியில் (நெருப்பு-அக்னிக் குண்டம்) இட்டு எரித்து விடுவார். மேலும் அந்தத் துணிகள் கிழிந்துபோனால்தான் எரிக்கப்பட வேண்டும் என்பதில்லை. சில சமயங்களில் ஓரளவு பயன்படுத்தப்பட்ட துணிகளைக் கூடத் துனியில் போட்டு எரித்துவிடுவார், பாபா. சில நேரங்களில் கிழிந்துபோன ஆடைகளைத் தைத்தும் அணிந்து கொள்வது பாபாவின் வழக்கம். 

சாயிபாபா எந்த பக்தனையாவது ஆன்மீகத்தில் முன்னேறச் செய்ய முடிவு எடுத்துவிட்டால், அப்போது அந்த அதிர்ஷ்டசாலி பக்தர் -சாயிபாபா அணிந்திருந்த பழைய துணிகளை அன்புப் பிரசாதமாகப் பெறுவார். பிரம்மச்சரியதவ ராஜயோகியாய் துனி எனும் அக்னிக் குண்டம் அருகில் அமர்ந்திருந்து உதவி வேண்டுவோரின் குறை தீர்த்த முனிவராம் சாயிபாபாவின் துணியிலும் தவக்கனல் மிகுந்திருக்கும். அதனால் அத்துணிகள் சக்தி உள்ளவையாக இருந்தன. ஒரு தடவை சாயிபாபா தனது கப்னியை மஹல்சாபதிக்கு அன்பளிப்பாய் கொடுத்திருந்தார். இதன் பிறகு இல்லறத் துறவியாக குடும்பப் பொறுப்புக்களையும், கடமைகளையும் கவனித்து வந்த அதே சமயத்தில் மஹல்சாபதி அவர்கள், சாகும்வரை சந்நியாசியாக வாழ்ந்தார்.

மற்றோர் சமயத்தில் சாயிபாபா தனது கப்னியை "முக்தாராம்" என்கிற பக்தருக்கு அளித்திருந்தார். அந்த கப்னி அழுக்காக இருந்ததால், முக்தாராம் அதைத் துவைத்து வாடாவில் (தர்மசாலை) காய வைத்து இருந்தார். இதன்பிறகு முக்தாராம் பாபாவின் தரிசனத்திற்குச் சென்று விட்டார். காகா சாஹேப் தீக்ஷித் வாடாவில் காயப் போட்டிருந்த கப்னிக்கு அருகில் வாமன்ராவ் அமர்ந்து பாதுகாத்துக் கொண்டு இருந்தார். அப்போது அதிசயத்தக்க விதத்தில் கப்னித் துணியிலிருந்து பாபாவின் குரலைத் தெளிவாகக் கேட்டார், வாமன்ராவ். " இதோ, முக்தாராம் என்னைக் கொண்டு வந்து, தலை கீழாகத் தொங்க விட்டு இருக்கிறான், பார் " என்ற பாபாவின் குரல் கேட்டது. 

சட்டென்று சுதாரித்துக் கொண்ட வாமன்ராவ் உடனடியாக அந்த கப்னியை எடுத்துத் தாமே அணிந்து கொண்டார். பிறகு வாமன்ராவ் துவாரகாமாயிக்குச் சென்றார். முக்தாராமுக்குக் கொடுத்திருந்த தனது கப்னியை வாமன்ராவ் அணிந்து வருவதைக் கண்ட சாயிபாபா கோபமடைந்தார். ஆனால் ஆன்மீகப் பாதையில் மன உறுதியுடன், தக்க தருணத்தில் சந்நியாசம் பெறுவதில் வைராக்கியமாக வாமன்ராவ் இருந்தார். இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆன்மீக வாழ்வில் வாமன்ராவ் மிகுந்த உயர்நிலை அடைந்தார்.

அக்டோபர் 15, 1918, செவ்வாய்க் கிழமை அன்று பாபா சமாதி அடைந்த திருநாளில் ஷீரடியில் ஓர் பழந்துணிப் பை திறந்து பார்க்கப்பட்டது. இந்தப் பையினை எவரும் தொட சாயிபாபா அனுமதித்ததில்லை. அந்த பையில் பச்சை நிற கப்னியும், பச்சை நிற தொப்பியும் இருந்தன. அவை காசிராம் என்கிற தையல்காரர் பாபாவுக்குக் கொடுத்தவையாகும். சில நாட்கள் அவற்றை பாபா அணிந்திருந்தாலும் பின்பு வெண்ணிற மேலங்கியையே பாபா விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்த பை, மேலும் பிற பொருட்களுடன் சமாதி உள்ளே சாயிபாபா பரு உடலுடன் வைக்கப் பட்டது. பாபா அணிந்திருந்த மற்றோர் கப்னி, ஷீரடியில் உள்ள தீக்ஷித் வாடா "சாயி பாபா மியுசியத்தில்" மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதை அந்த அருங்காட்சியகத்திலே இன்றும் காணலாம்.

(தொடரும்)







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.