சிவ புராணம்
நம் பழந்தமிழ் நாட்டிலே ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தவ முனிவர் மாணிக்கவாசகர் அவர்களால் இயற்றப்பட்ட நூல், திருவாசகம் ஆகும். அதில் ஒரு பகுதிதான் சிவ புராணம் ஆகும். இப் பிரபஞ்சத்தின் இறைசக்தியாகிய சிவபெருமானாரின் தத்துவத்தை விளக்கும் இந்த தமிழ் மந்திரம் சக்தி வாய்ந்தது. அதன்
சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக, அந்த மந்திரத்தில் வரும் வரிகளான
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப்
பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி
முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்" என்ற வரிகள்
பரிணாமத்தை விளக்கும் அறிவியல் நோக்கில் அமைந்துள்ளது பெரிதும்
வியக்கத்தக்கது.
இந்த அற்புதத் தமிழ் மந்திரத்தை தருமபுரம் திரு. சுவாமிநாதன்
அவர்கள் பாடக் கேட்ட தமிழ் மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்களாக
இருந்திருக்க வேண்டும். தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் தமிழ்நாட்டின்
நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம்- வீராக்கண் என்ற ஊரில் 1923-ஆம் ஆண்டு பிறந்து,
தெய்வத் தமிழ் இசையை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களிடம் கொண்டு
சேர்த்தவர். தனது 12 வயதிலேயே மயிலாடுதுறை நகரத்தின் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன மடத்தில் சேர்ந்து திருமுறைக் கலாநிதி திரு.வேலாயுத ஓதுவார் அவர்களிடம் மாணவராக தெய்வத் தமிழ் இசை, சைவ சித்தாந்த மரபில் பயின்று தமது ஆன்மீக வாழ்வினைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசவைக் கலைஞராக இருந்தவர். கலைமாமணி விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். அவர் தமது 86-ஆம் வயதில்
2009-ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.தருமபுரம் ப. சுவாமிநாதன் |
(இணையத்தில் பதிவேற்றியவர்: திரு. வெங்கட சுப்ரமணியன்)