Total Pageviews

Thursday, June 27, 2013

Babas' Procession

பாபாவின் ஊர்வலம்

பவனி வரும் பாபாவின் அரிய படம்


 .......................................................................................................................................................................................................................





 (Courtesy: Vikas Nandlal &tutorialspoint.com)
பாபாவின் சாவடி ஊர்வல நிகழ்ச்சி ஸ்ரீ சாயி சத்சரித்திர புனித நூலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. பாபா ஒரு நாள் துவாரகாமாயி மசூதியிலும் - மறுநாள் மசூதிக்கு அருகில் ஓரிரண்டு அறைகள் உள்ள கட்டிடமான சாவடியிலும் தூங்கினார். அவ்வாறு சாவடிக்குப் போகும்முறை வந்ததும் மக்கள் அவரைச் சூழ்ந்து கொள்வர். "இன்னிசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பஜனை நடத்தினர். அடியவர்களின் கைகளால் தாங்கப்பட்டவாறே பாபா நடந்துவரும் வழியில் துணி மடிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. 
தாத்யாபாடீல், அவரது இடது கையையும், மஹல்சாபதி வலது கையையும், பாபு சாஹேப் ஜோக் அவர் தலை மீது குடையையும் பிடித்திருந்தனர்.
பக்தர்கள் இருமருங்கிலும் அன்புடனும், பக்தியுடனும் தொடர்கிறார்கள். அவ்விடத்து வளி மண்டலம் முழுவதும் மகிழ்ச்சி ஊடுருவிப்பரந்து ஊர்வலம் சாவடியை அடைகிறது. அக்காட்சியும் அந்நாட்களும் சென்றுவிட்டன. ஒருவரும் அவைகளை இப்போதோ, எதிர்காலத்திலோ பார்க்கமுடியாது. எனினும் அக்காட்சியின் தோற்றத்தை நினைவுகூர்ந்தும், மனக்கண்முன் கொணர்ந்தும் நமது உள்ளங்களுக்கு அமைதியையும், திருப்தியையும் வழங்கலாம்."
இவ்விதமாக பாபாவின் சாவடி ஊர்வல நிகழ்ச்சி சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லக்கு உற்சவத்தில் பக்தர்கள் - இந்நாட்களில் (Shirdibaba.org)
இறை அவதாரமாகத் தோன்றிய சாயி பாபாவை, இப்பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தியாக சகல மரியாதைகளுடன் மக்கள் பல்லக்கு அலங்காரம் செய்து அன்புடன் அழைத்துச் செல்ல முற்பட்டபோதும் பாபா ஒருபோதும் அவர் வாழ்நாளில் பல்லக்கில் ஏறி அமரவில்லை. எளிமையாக நடந்தே சென்றார்.

இன்றைய தலைமுறையினரும், எதிர்கால சந்ததியினரும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் என்றோ நடந்த பாபா வாழ்க்கைச் சம்பவங்களோடு தங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது. பாபாவின் தவ வாழ்க்கையைப் பற்றி, அவர்தம் அற்புத செயல்கள் பற்றி, மக்கள் தொண்டு பற்றி, தியாகமும் எளிமையும் மிகுந்த வாழ்வைப்பற்றி நினைத்துப் பார்க்க முடிகிறது. அன்று ஷீரடியில் நடந்த அதே போன்ற நிகழ்ச்சியில் தாமும் கலந்து கொண்டு பக்தி உணர்வினைப் பெற்றுக் கொள்ள உதவுகிறது. மனித உடலில் நடமாடிய தெய்வத்துடன் ஷீரடியில் சேர்ந்து நடந்து செல்லும் பாக்கியம் இல்லாமற் போனாலும், இன்று இத்தகைய உற்சவங்களில் மக்களுடன் ஒன்றாக பங்குபெறும் பக்தர்கள் இப்போதும் சூட்சும வடிவில் பாபா உள்ளதையும், இன்றும் அற்புதங்களைத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதையும் அவரவர் நம்பிக்கைக்கும், பொறுமைக்கும், விடா முயற்சிக்கும், நல்ல உயர்ந்த எண்ணங்களுக்கும்-செயல்களுக்கும் ஏற்ப உணர்ந்து மகிழலாம்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் IDPL சாயிபாபா கோவில் பல்லக்கு உற்சவ நிகழ்ச்சியின் ஒளிக்காட்சி:

 
இது ஒரு saibabaidplhyd வெளியீடு

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.