Total Pageviews

Sunday, June 10, 2012

The History of Baba Statue --2

சாயி மூர்த்தியின் வரலாறு !  -- 2

சாயி பக்தி அன்பர்களே, சாயி மூர்த்தியின் வரலாற்றில் முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது பளிங்குக்கல் அல்லது சலவைக் கல் அல்லது மார்பள் ஸ்டோன் பற்றித்தான். காரணம் நமது தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றில் அனைத்து கோவில்களிலும் கருங்கல் சிற்பங்கள், செப்பு, தங்கம், பஞ்ச உலோக சிலைகள், போகர் உருவாக்கிய பழனி நவபாஷாண சிலை, மரச் சிற்பங்கள், ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான தஞ்சாவூர் பெரிய கோவிலின் கிரானைட் கருங்கல் வேலைப்பாடு போன்ற வகைகளை அதிகம் கண்டு உள்ளோம். ஒவ்வொரு பகுதியின் புவியியல், பாரம்பரியங்களுக்கு ஏற்ப காலத்தால் அழியாத கலைகளும் ஓவியங்களும் சிற்பங்களும் உருவாகி வந்துள்ளன. அவற்றில்  உலகப் புகழ் பெற்ற இத்தாலியன் வெண்ணிற மார்பள் சிற்பங்களும் அடங்கும்.

(Photo Courtesy: http://www.babasaiofshirdi.org)

வெண்ணிற மார்பள் கற்கள் இத்தாலி நாட்டில் நீண்ட கால பாரம்பரியமும், பெருமையும் உடையது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் தொடங்கிய இந்த சலவைக்கல் சிற்ப வேலை அந்த நாட்டின் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இத்தாலியின் அப்புவான் மலைத் தொடரில் மிகச்சிறந்த கராரா வகை வெண்ணிற மார்பள் கற்கள் கிடைக்கின்றன. அம்மலைத் தொடரில் ஆறாயிரத்து ஐநூறு அடி நீள கற்சுரங்கங்களிலிருந்து (குவாரிகள்) இந்த வகை கற்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன. முன்பெல்லாம் உளி, வெடி மருந்து கொண்டு எடுக்கப் பட்ட இக்கற்கள் இப்போது மிக நவீன முறைகளைப் பயன்படுத்தி எடுக்கப் படுகின்றன. இத்தாலியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வீட்டின் சமையலறை, வீட்டு கதவுகள், அழகுச் சிற்ப வேலைப்பாடுகள், சர்ச்- தேவாலய சிற்பங்கள் என பல பகுதிகளில் இந்த கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் நூறு வருடங்களுக்கு மேலாக வர்மொன்ட் போன்ற பகுதிகளில் சலவைக் கற்கள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநில பளிங்குக் கற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இத்தாலி பளிங்குக் கற்களின் சிறப்பு அம்சம் அதில் காணப் படும் வரி வரியான அழகுத் தோற்றங்கள் ஆகும். மார்பள் கற்கள் நீண்ட காலம் அழியாது இருக்கக் கூடிய கடினத் தன்மையும், அழகு மிளிரும் தன்மையும் தன்னகத்தே கொண்டவை.


ஷீரடியில் பாபா மஹா சமாதி அடைந்து 36 வருடங்களுக்குப் பிறகு 1954-ஆம் வருடம் அக்டோபர் 7-ஆம் நாள் அன்று சாயி பாபாவின் மூர்த்தி பிரதிஷ்டை (நிறுவுதல்/அமைத்தல்) செய்யப் பட்டது. இப்போது ஷீரடி செல்லும் வாய்ப்புப் பெற்ற பக்தர்களைக் கேட்டால் அம்மூர்த்தியின் தோற்றத்தை எண்ணி வியப்புடன் சொல்வார்கள். பாபா உயிருடன் அமர்ந்திருப்பதைப் போல பிரம்ம தேஜஸ் என்கிற தெய்வீக முகப் பொலிவுடன், பளபளக்கும் முக அமைப்புடன் நம்மையே பார்ப்பது போன்ற வடிவுடன் பாபா காட்சி தருவதை அங்கு காணலாம். இத்தகைய சிறப்பு பெற்ற அந்த மூர்த்தி இத்தாலியின் வெண்ணிற மார்பள் கல்லில் செதுக்கப் பட்டது.

1952 -ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பைத் துறைமுகத்தில் பல இறக்குமதிப் பொருட்களோடு ஓர் பொருளாக ஒரு பெரிய இத்தாலியன் பளிங்குக்கல் வந்திறங்கிய போது மக்கள் ஒருவருக்கும் அந்த கல் ஏன் வந்தது - எங்கு செல்கிறது, யார் வரவழைத்தனர், என்கின்ற விவரமெல்லாம் தெரியவில்லை. துறைமுக அதிகாரிகளுக்கும் எந்த தகவலும் கிடைக்காததால் அந்த கல்லை ஏலம் விட ஏற்பாடு செய்தனர். அந்த ஏலத்தில் அக்கல்லை வாங்கியவர் பிறகு ஷீரடி சன்ஸ்தானத்திற்கு வழங்கினார். அந்த இத்தாலியன் பளிங்குக் கல்லின் தரத்தைப் பார்த்து வியந்த ஷீரடி சன்ஸ்தான அலுவலர்கள் அதனை பாபா சிலை செய்ய பயன்படுத்துவது என்று முடிவெடுத்தனர். அப்போது ஒரு திறமை வாய்ந்த சிற்பியை அவர்கள் தேடியபோது அவர்களுக்குக் கிடைத்த அற்புத சிற்பக்கலை வல்லுனர்தான் ஸ்ரீ பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்கள்.

(Courtesy: Sai Devotee Rohit Behal)

இத்தகு காலத்தால் அழியாத காவியச் சிற்பத்தை உருவாக்கும் பெரும் பொறுப்பு மும்பையைச் சேர்ந்த ஸ்ரீ பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்த நிலையில் அவர் சந்தித்த சவால்களும் அந்த அரும் பணியினை எவ்வாறு வெற்றிகரமாக அவர் முடித்தார் என்பதையும் இனி வரும் பகுதிகளில் காணலாம்.



(வரலாற்றுப் பயணம் தொடரும்..)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.