Total Pageviews

Saturday, March 26, 2011

Sai Dhyaanam

சாயி தியானம் செய்வது எப்படி ?

சாயி சொந்தங்களே,

சாயி தியானம் செய்வது எளிமையான, சிறப்பான அனுபவம் ஆகும். எனக்குத் தெரிந்த வரையில் விளக்குகிறேன். சாயி தியான படிநிலைகளாவன:-
  1. முதலில் கோயிலில் சிலைக்கு முன்போ, அல்லது சாயி படத்தின் முன்போ அமர்ந்து கொண்டு, அல்லது மனக்கண் முன்பு கற்பனையாக சாயி உருவத்தை கொண்டு வந்தோ உனக்கு வசதியான நிலையில் இருந்துகொண்டு பாபாவின் முகம் முதல் பாதங்கள் வரை, பாதங்கள் முதல் முகம் வரை முடிந்த மட்டும் பார்க்க வேண்டும். இதுவே உருவ தியானம் ஆகும் (Meditation through Visualization)
  2. அடுத்து, பாபாவின் குண நலன்கள் - பொதுநல நோக்கு, தரும சிந்தனை, மக்கட் தொண்டு, உதவும் உள்ளம், உயர்ந்த சிந்தனை, ஏழைகளின் மீது பரிவு, யாராக இருந்தாலும் சமமாக மதிக்கும் ஆத்ம சிந்தனை, உலக சமாதானம், மக்களின் ஒற்றுமை பற்றிய அக்கறை, எல்லா உயிர்களின்மீதும் இரக்கம், இன்னும் இது போன்ற குணங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக பாபாவின் சத் சரித்திரம் என்ற புத்தகத்தை ஏற்கனவே படித்திருக்க வேண்டும். (Thought process on the traits)
  3. பிறகு, பாபாவின் வாழ்க்கை நமக்கு போதிப்பது என்ன? என்று சிந்தனை செய்யும்போது, பற்றற்ற மனோநிலையில் பிரதிபலனை பதிலுக்கு எதிர்பார்த்துக்கொண்டு இல்லாமல், உலக மக்களுக்கே தொண்டு செய்வதுதான் மிகச் சிறந்த வழிபாடு - நிஷ்காம்ய கர்ம யோக வழி என்பது தெளிவாக விளங்கும். அப்படி எந்த எந்த வழியிலெல்லாம் பொதுமக்களுக்கு நன்மை செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் (Brainstorming for the Service to Humanity)
  4. அடுத்தபடியாக இத்தகைய சன்மார்க்க தொண்டு செய்வதற்கு ஏற்ற சக்தியை பெற பாபாவிடம் வேண்டுதல்;  வைராக்கியம், நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி  இவற்றை வளர்த்துக்கொள்ள உறுதி எடுத்துக் கொள்ளல் (Determination, Complete faith, Patience, Persistence).
  5. மனதை ஒருமுகப்படுத்தி உயர்ந்த மன நிலையில் சிறிது நேரம் உற்சாகத்தோடு இருத்தல் (Concentration).
  6. இறுதியாக இரு கை கூப்பி பாபாவை வணங்கி தியானத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
அன்றாட வாழ்க்கை கடமைகளை முடிக்காமலோ, பசியான வயிறை வைத்துக் கொண்டோ, ஆத்திரம்-அவசரத்துடனோ செய்யக்கூடாது. இனிமையான மனதுடன் ஒரு பத்து நிமிடம், பதினைந்து நிமிடம் செய்தாலே போதுமானது. மேலும் மனப் பதட்டம், சஞ்சலம், குழப்பம், பயம் இவை வரும்போது முடிந்த வரையில் இந்த தியானத்தை செய்தால் சிறப்பு. இது சித்தர்களின் மானசீக பூஜை முறை போன்றது.


குறிப்பு: மேற்கண்ட வழிமுறையினை  பல நூலாசிரியர்கள், மகான்களின் அறிவுரைகளை படித்து அதன்படி செய்துபார்த்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது என் பணிவான கருத்து, சொந்த வழிமுறை ஆகும். மேலும் நண்பர்கள் அவரவர் விருப்பப்படி வழிபடலாம்.

ஓம் சாயி