Total Pageviews

Thursday, August 21, 2014

Keerthan Sankeerthan

    *கீர்த்தன்- சங்கீர்த்தன்* - புதிய தொடர் - பகுதி 1  



             ந்து கலாச்சார வழிபாட்டில் நவ (ஒன்பது) வித பக்தி  வழிமுறைகள் உண்டு. இந்த ஒன்பது வழிமுறைகளில் ஒன்றான 'கீர்த்தனம்' என்பது இக்கலியுகத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஷீரடி சாயி பாபாவின் பக்தி வழிபாட்டில் 'சங்கீர்த்தனம்' என்பது ஓர் இன்றியமையாத பங்கினை கொண்டுள்ளது. ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடைவது. 

பக்தர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி ஜாதி, மத, இன,பால், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணர்வுடன்  பக்தி உணர்ச்சிப் பெருக்கில் திளைக்க வைப்பதால்தான் இக் கீர்த்தனம் - சபரிமலை ஐயப்ப வழிபாடு, ஹரே கிருஷ்ணா வழிபாடு, பழனி முருகன் வழிபாடு போன்றவற்றில் பல்லாண்டுகளாக சிறந்த இடம் பெற்றுள்ளது. இக்கால இளைஞர்களுக்கு எழும் பல விதமான கேள்விகளும் பதில்களும் இத் தொடரில் இனி இடம் பெறும். கீர்த்தன் மற்றும் சங்கீர்த்தன் பற்றி சாயி மார்க்க மக்கள் தொண்டில் முன்னோடியும், கர்மயோகியும், தவச் சான்றோருமான புட்டபர்த்தி சித்தர் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். இவரது விளக்கங்கள் கேள்வி-பதில் வடிவில் வலைப்பூ வாசகர்களுக்காக:


1. 'கீர்த்தன்' என்றால் என்ன?
கீர்த்தன் என்பது கடவுளின் புகழை பிறருக்கு நன்கு கேட்கும்படி (இசைக் கருவிகளோடு) பாடலாக பாடுவது ஆகும்.

2. 'சங்கீர்த்தன்' என்றால் என்ன?
சங்கீர்த்தனம் என்பது வெறும் உதட்டசைவிலோ, நாக்கை அசைத்தோ பாடுவது அல்ல. அது இதயத்தில் இருந்து, இதயசுத்தியுடன், உணர்வுபூர்வமாக பாடுவதாகும். கடவுளின் பெருமையை, புகழை நினைக்கும்போது ஏற்படும் இனிமையில் திளைத்து எழுப்பும் இதயப் பேரொலி அது. கேட்பவருக்கும், பாடுபவருக்கும் சிலிர்ப்பு உணர்ச்சியைத் தருவது. பாடுபவர் கேட்பவரின் பாராட்டுரையையோ, புகழ்ச்சியையோ எதிர்பார்க்க மாட்டார். பிறர் தரும் பாராட்டுக்கோ, குறை கூறும் பேச்சிலோ கவனம் செலுத்தாது, தானாகத் தோன்றும் பரவச நிலையின் வெளிப்பாடுதான் அது. ஒருவரின் சுய திருப்திக்காகவும், சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவதே சங்கீர்த்தனம் ஆகும். (சங்கீர்த்தன் என்பதை வட இந்தியாவில் 'பஜன்' என்றும், தென் இந்தியாவில் 'பஜனை' என்றும் கூறுவர். பக்தி சங்கீதக் குழு சேர்ந்திசை என்றும் கூறலாம்)


'தாள்' இசைக்கருவியுடன் ஸ்ரீசத்யசாயி பாபா 
3. சங்கீர்த்தனம் செய்வது எதற்காக?
உயர்ந்த வகை கீர்த்தனமான சங்கீர்த்தனம் என்பது கடவுள் அருளைப் பெற பெரும் ஏக்கத்துடன் போற்றிப் பாடும் அனுபவமாகும். இது நிகழும் சுற்றுப்புற சூழ்நிலையையே சுத்திகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இன்று மனிதன் வன்முறை,வெறுப்பு, கொடுமை மற்றும் தீய அவக்கேட்டினைக் குறிக்கக்கூடிய சப்தங்களால் சீர்கேடடைந்த காற்றினைச் சுவாசிக்குமாறு கட்டாயப் படுத்தப்பட்டுள்ளான். இதனால் தன்னுள்ளே பெரும் முயற்சி செய்து அடையப் பெற்ற அருட் பேறுகளை மிக விரைவாக இழந்து வருகிறான். இந்நிலையில் சங்கீர்த்தனம்- இறைவனின் புகழைப் போற்றிப் பாடும்போது ஏற்படும் அதிர்வலைகள் வளிமண்டலத்தைத் தூய்மையாக்கி, சாந்தப்படுத்தி, உயர்வாக அளிக்கும். மேலும் ஈத்தர் எனப்படும் தூய வெளியிலே இந்த அதிர்வலைகள் ஊடுருவிக் கலந்து பரவி நிரந்தரமாக இருக்கும். இம் மந்திர ஒலிகளை ஒதிவிடும் மனிதர்களின் குறிப்பிட்ட கால எல்லைக்கப்பாலும் நீடித்து இருக்கும். இத்தகைய காற்றினை சுவாசிக்கும் இதயமும் சுத்தமாகும்.

4. நாமசங்கீர்த்தனம் என்றால் என்ன?
கடவுளின் பெயரைப் பலமுறை தொடர்ந்து கூறி சங்கீர்த்தனம் செய்வதே நாமசங்கீர்த்தனம் ஆகும்.

5. அகண்ட பஜன் என்றால் என்ன?
பொதுவாக 24 மணி நேரமோ, ஏழு நாட்களோ, தொடர்ந்து இடைவிடாது சங்கீர்த்தனம் செய்வதே அகண்ட பஜன் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைப் பருவம் முதல் இறுதிக்காலம் வரை உலக நன்மையையே கருத்தில் கொண்டு உரத்த குரலில் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தோடு பஜனை செய்வதுதான் அகண்ட பஜன் என்பது ஸ்ரீசத்யசாயி அவர்கள் கூறியதாகும்.

6. சங்கீர்த்தனத்தை எவ்வாறு செய்தல் வேண்டும்?
பல நூறு பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பஜன்கள் பாடுவதில் சேர்ந்து கொள்ளும்போது அந்த தெய்வீக வழிமுறையில் தம்மைத் தாமே மெய்மறந்து முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி ஈர்த்துக் கொள்ளப்பட வேண்டும். சங்கீர்த்தனத்தை வெறுமனே பொழுதுபோக்கு போல கருதக்கூடாது. மெதுவாக சோம்பலுடன் எழுச்சியற்ற வகையில் பாடுதல் கூடாது. ஆத்மார்த்தமாக (உணர்வுபூர்வமாக) துடிப்புடன் பாடவேண்டும். சங்கீர்த்தனம் என்பது பா(bha)வம்-ராகம்-தாளம் (Feeling-Melody-Rhythm)அதாவது உணர்ச்சி-பண்ணிசைவு- ஒழுங்கான ஓசைக் கூறு முதலியவற்றை ஒருங்கே இணைத்து இசைத்து பாடுதல் வேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து குழுவாக-ஒரே நேரத்தில்-ஒரே மெட்டில்- ஒரே உணர்ச்சியுடன் பாடும்போது தெய்வீகத்தினை அனுபவிக்கலாம். எண்ணம்-சொல்-செயல் இம்மூன்றில் தூய்மையோடு பாடுதல் வேண்டும். நாக்கால் உச்சரிக்கும் சொல்லை மனத்தால் எண்ணிக் கொண்டு கைகளால் தட்டிக் கொண்டு செய்யும் சங்கீர்த்தனம் நமது எண்ணம்-சொல்-செயலை ஒருமுகப் படுத்தி, இதயத்தைத் தூய்மை படுத்தி இறைபக்தியினை பேணி வளர்க்கின்றது.

பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இசைக்கும் சங்கீர்த்தன நிகழ்ச்சி எளிமையாக, எல்லோரும் பங்குபெறும் வகையில் இருத்தல் வேண்டும். பாடல் மெட்டும், தாளமும் எளிதாக எல்லோராலும் பின்பற்றக் கூடியதாக அமைக்க வேண்டும். கீர்த்தனை என்பதில் பாடுபவரின் வல்லமைக்கே முக்கியத்துவம் இருக்கும். பஜனை சங்கீர்த்தனத்தில் எல்லோருடைய பொதுவான திறனை மனதில் கொண்டு வடிவமைத்தல் வேண்டும். எல்லோருக்கும் தெரியாத, நன்கு பிரபலமாகாத பாடலை தலைமைப் பாடகர் பாடினால் குழுவில் அமர்ந்துள்ள பக்தர்களிடமிருந்து ஏற்புத் தன்மையும் குறைவாக இருக்கும். குழுமியுள்ள சக பக்தர்களிடமிருந்து உற்சாகமோ, உண்மையான பங்கேற்றலோ இருக்காது. அவர்களது கவனமும் சிதறும். தனெக்கென தனி பாணியில் தன்னிச்சையாக பாடிக் கொண்டிருப்பவர்கள் குழு இசையான பஜனைக்கு ஏற்றவர்களாக மாட்டார்கள். மேலும் சமூக சங்கீர்த்தனத்தில் ராக ஆலாபனை அதாவது விளக்கமான பண்ணிசைப்பு என்பதற்கே இடமில்லை(கீர்த்தனை செய்வோருக்கே அது பொருந்தும்). கடவுள் பெயர் மற்றும் ஒலி உச்சரிப்பிற்கே முக்கிய இடமுண்டு.  இவைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் சேர்ந்திசைத்து - அனைவரும் ஒன்றாக கலந்து கொள்ளும்போது சந்தோஷமும், நல்லிணக்கமும் ஏற்படும்.

மேலும் பல ஆய்வுகளின் மூலம் இனி வரும் பகுதிகளில் 'கீர்த்தன்-சங்கீர்த்தன்' கேள்வி பதில்கள் வடிவில் தொகுத்து அளிக்கப்படும்.
(தொடரும்)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.