சாயிபாபாவின் உடை - பகுதி 6
"ஓ!
இராம பக்த ஹனுமானே, பாபாவின் பக்தனாக இந்த சேவையை நான் செய்து முடிக்க
சக்தியைக் கொடு" என்று வேண்டி மந்திரங்களை முணுமுணுக்கத் தொடங்கினார், திரு. ஜோதீந்திரா. அப்போது, குளியலறைக்குள் குளித்து முடித்திருந்த பாபா "அரே பாவ், ஏன் ஹனுமாரிடம் உதவி கேட்டு பிரார்த்தனை செய்கிறாய்?" என்று கத்தினார். இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா - ஓர் எங்கும் நிறைந்த சர்வ அந்தர்யாமி என்பது புலப்பட்டது. அதாவது இறைசக்தியாக எங்கும் நிறைந்து இருப்பதால் சிறிது தூரத்தில் நின்றிருந்த ஜோதீந்திராவின் உள்மனதில் ஏற்பட்ட எண்ணங்களைக் கூடத் துல்லியமாகப் படிக்க வல்லவராக இருந்தார் சாயிபாபா. சாயி பாபாவின் குரலைக் கேட்டவுடன் அங்கு சென்ற ஜோதீந்திரா தமது செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கோரினார்.
தமது செயலுக்காக அவர் பாபா முன்னிலையில் வருந்திய உடனேயே அவர் கையிலிருந்த கப்னியின் எடை மிகக் குறைவாக மாறியது. இதன் பிறகு பாபாவிடமிருந்து எவனும் எந்த சூழ்நிலையிலும் எதையும் மறைக்க முடியாது என்பதையும் திரு. ஜோதீந்திரா உணர்ந்து கொண்டார்.
|
பாபா அளித்த கப்னி (Photo Courtesy: Harihar Rautaray) |
1918-ஆம் வருடம் காலஞ்சென்ற டாக்டர் கேஷவ் பகவந்த் கவான்கர், தனது 12-ஆம் வயதில் தன்னுடைய பெற்றோர் மற்றும் அத்தையுடன் ஷீரடிக்குச் சென்றார். சிறுவனான கவான்கரை அருகில் அழைத்து அமர வைத்த பாபா அவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார். அன்று கவான்கரிடமிருந்து இரண்டு பைசாக்கள் தட்சிணை கேட்டார். சிறுவன் கவான்கர் குழப்பமடைந்த நிலையில், அருகே நின்றிருந்த மாதவராவ் தேஷ்பாண்டே என்கிற ஷாமா அவனது கையை எடுத்து பாபாவின் உள்ளங்கையில் வைத்து, தட்சிணை "தரப்பட்டது" என்று கூறச் சொன்னார். சிறுவன் கவான்கரும் அப்படியே கூறினான். (இரண்டு பைசாக்கள் என்பது - பாபா மக்களிடம் எதிர்பார்த்த ஷ்ரத்தா மற்றும் சபூரி -அதாவது அசைக்கமுடியாத நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவையே). அதற்கு பாபா "எடுத்துக் கொள்ளப்பட்டது" என்று மறுமொழி பகர்ந்தார்.
இதன்பிறகு சிறுவன் கவான்கருக்கு தமது கப்னி உடை ஒன்றைப் பிரசாதமாக அளித்தார். இந்த நிகழ்ச்சியின் அர்த்தத்தையும், நல்வாய்ப்பையும் பிற்காலத்தில் நன்கு உணர்ந்து கொண்டார், திரு கேஷவ் பகவந்த் கவான்கர். ஷீரடியில் பாபா அளித்த கப்னி உடை இன்றும் திரு. கவான்கர் அவர்களின் மும்பை வீட்டில் அவரது குடும்பத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த வரலாற்றினை திரு. ஹரிஹர ரௌடாரே அவர்கள் இணையத்தில் விளக்கி எழுதி உள்ளார். அந்தக் குறிப்புகள் பின்வருமாறு:
' மும்பையைச் சேர்ந்த டாக்டர் திரு. சாயிநாத் கவான்கர் (64 வயது) இன்றும் சாயிபாபா தனது தகப்பனாருக்கு அளித்த தனிப்பட்ட பிரசாதமான- கப்னி உடையினைப் போற்றி பாதுகாத்து வருகிறார். இவரது தந்தைதான் டாக்டர் கேஷவ் பகவந்த் கவான்கர் அவர்கள். இவர் ஹரிஹர் ரௌடாரேயிடம் கூறியது: " இந்த உடை ஷீரடி சாயி பாபாவினால் எனது அப்பா திரு. கேஷவ் ப. கவான்கருக்கு 1918-இல் கொடுக்கப் பட்டதாகும். பாபா என்றும் அழியாத சமாதி நிலை அடைவதற்கு சில மாதங்கள் முன்னால், எனது தந்தை 12 வயது சிறுவனாக இருந்த போது ஷீரடியில் பாபா பிரசாதமாக-பரிசாக அளித்தார்.
திரு கேஷவ் அவர்கள் ஏப்ரல் 28, 1906-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அர்னாலா மீன்பிடி கிராமத்தில் பிறந்தார். கேஷவிற்கு ஏழு வயதிருக்கும் போது இதயத்தில் கடும் வலி கண்டு சுரம் வியாதியுடன் இருந்தார். அந்நாட்களில் அறுவைச் சிகிச்சை தவிர எந்த வியாதிக்கும் அதிக மருந்துகள் கிடையாது. கேஷவ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான யெஷ்வந்த்ராவ் கல்வான்கர், ஒரு சிறந்த சாயி பக்தர். அவர் கேஷவ்வின் குடும்பத்தாருக்கு தக்க அறிவுரை வழங்கி ஷீரடி சாயிபாபாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து, பாபாவின் லீலைகளை (அவர் நிகழ்த்தும் அதிசய நிகழ்ச்சிகளை) எதிர்பார்த்து இருக்கும்படியும் கூறினார்.
கேஷவ்வின் அத்தை திருமதி. தாமாபாய் அவர்கள் 'கேஷவ் குணமடைந்து விட்டால் ஷீரடிக்குச் சென்று ஒரு பாக்கெட் இனிப்பு பேடாக்கள் சாயிபாபாவுக்கு நேர்த்திக் கடனாக அளிப்பதாக' வேண்டிக் கொண்டார். மறுநாளே அதிசயத்தக்க விதத்தில் கேஷவ் பூரண குணம் அடைந்து படிப்பைத் தொடர, தனது மராத்திப் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். கேஷவ் குடும்பத்தினர் பாபாவிடம் வேண்டிக் கொண்டபடி நடந்து கொண்டார்களா? பாபாவின் ஆசியை அவர்கள் பெற்றது எவ்வாறு? கப்னி உடையை பாபாவிடமிருந்து நேரடியாகப் பரிசாகப் பெற்ற சிறுவன் கேஷவ் பிற்காலத்தில் எவ்வாறு புகழ் பெற்று விளங்கினார்? அடுத்த பகுதியில் மேலும் தொடர்ந்து காண்போம்.
(தொடரும்)