Total Pageviews

Sunday, December 9, 2012

சாயி மூர்த்தியின் வரலாறு - 8


(ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாயிஷ் மூர்த்தி கலா  கேந்திரா  நிறுவனத்தினர் தயாரிக்கும் அழகிய பாபா மூர்த்தி Courtesy: www.sayshmoorti.com)

ஷீரடிக்கு நாள்தோறும் செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் சாயி மூர்த்தியானது மிகுந்த உயிரோட்டத்துடன், பளபளக்கும் முகத்தோற்றத்துடன் பாபா கம்பீரமாக அமர்ந்திருக்கும் நிலையினை உடையது. தன்னைப் பார்க்கும் பக்தர்களை நேருக்கு நேராக பாபா பார்ப்பதுபோன்ற அனுபவத்தைத் தருவது. வருடந்தோறும் அதிகரித்துவரும் பக்தர்கள் தமது வாழ்வின் பிரச்சினைகளுக்கு வழிதேடி, பாபாவிடம் சரணடைந்து வேண்டிக்கொள்ளவும், மன அமைதி மற்றும் நிம்மதி பெறவும் ஷீரடி சாயி சமாதி மந்திரில் தரிசனம் செய்துகொண்டே இருக்கின்றனர். 

திருப்பதி புனித ஸ்தலத்திலே தொடர்ச்சியாக மக்கள் எறும்புகள் இனிப்பை நோக்கி ஊர்ந்து செல்வதுபோல் நடந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதுபோல ஷீரடியிலும் சாயி மூர்த்தியைக் காண மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருப்பதைக் காண, சமாதி மந்திரைப் பார்க்கச் செல்வதற்கு -முற்பிறவியிலும், இப்பிறவியிலும் மிகுந்த தானம், தவம், நற்கருமங்கள் செய்த புண்ணிய பலம் இருந்தால்தான் முடியும். அல்லது புதிய சாயி பக்தராக இருப்பின் பாபாவின் மேல் திட பக்தி, விசுவாசம், அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பொறுமையோடு, விருப்பமும் இருந்தால் ஷீரடி பயணம் சாத்தியமாகக் கூடும்.

இந்த சாயி மூர்த்தியின் வரலாற்றில் பல்வேறு பக்தர்களின் உண்மை அன்பினாலும், விடாமுயற்சியாலுமே மூர்த்தி பிரதிஷ்டை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதை அறியலாம். இனிவரும் எதிர்காலத்திலும் அனைத்து சந்ததியினரும் தரிசித்துப் பயனடையும் வகையில் ஷீரடி சாயி பாபா சமஸ்தான நிர்வாகிகள் முன்கூட்டியே திட்டங்கள் வகுத்து மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். 

Samadhi Mandir
பாபா உயிருடன் அங்கு வசிப்பதுபோலவே கருதும் சமஸ்தானத்தினர் - பாபா துவாரகாமாயி மசூதியில் வசித்த காலத்தில் என்னென்ன உபசரிப்புகள் செய்தனரோ, அதே போல் இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றனர். தினமும் அதிகாலையில் பாபாவுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. சாயிபாபாவுக்கு காலை-மதியம்-இரவு உணவுகள் படைக்கப்பட்டு, ஒரு நாளைக்கு நான்கு தடவை ஒவ்வொரு ஆரத்தியின்போதும் பாபாவுக்கு உடையை மாற்றி அணிவிக்கின்றனர். அப்போது வெள்ளி அல்லது தங்க கிரீடம் அணிவிக்கப்படும். இரவு அனைவரும் உறங்கப்போகும்முன் கொசு வலை கட்டப்பட்டு சமாதி மேல் தூய வெண்ணிற துணி போர்த்தப்படும். பாபா அணியும் கப்னி உடை தைக்கப்படும் அதே துணிவகைதான் இந்த வெண்ணிற துணியும் ஆகும். பாபாவுக்கு அருகில் குடிக்க தண்ணீரும் வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு பாபாவை எழுப்பி, கொசு வலையை அவிழ்த்து, பின்பு தூப, தீப ஆராதனை காட்டும் வேளையில் பூபாள ராகம் இசைக்கப்படும். முதல் ஆரத்தி முடிந்தவுடன் பாபாவுக்கு பாலபிஷேகம், நெய்யபிஷேகம், மற்றும் தயிர் அபிஷேகம் செய்யப்படும். பகதர்கள் காணிக்கை செலுத்தி தாங்களும் இந்த அபிஷேகத்தில் பங்கு பெறலாம். உடையும் வாங்கி அளிக்கலாம். மந்திருக்குள்ளேயே இருக்கும் சமஸ்தானக் கடையில் பாபா அணிந்த ஆடைகள் விற்பனைக்குக் கிடைக்கும். அன்பர்கள் அந்த புனிதமான ஆடையினை வாங்கி தத்தம் வீடுகளுக்கு, பூஜைக்கு எடுத்துச் செல்வர்.

இதைப் படிக்கும் புதிய வாசகருக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் சாயி பாபாவின் சக்தியை ஒரு தடவை உணர்ந்தவருக்கு இந்த வழிபாட்டு முறைகள் பேரன்பினால் பின்பற்றப்படுபவையே என்று உணர்ந்துகொள்ள இயலும். இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்னவென்றால் சாயி பாபாவின் அவதார ஸ்தலம் என்பதால் ஷீரடிக்குத் தனி மதிப்பும், உயர்வும் அமைந்துள்ள அதே சமயத்தில், பாபா அங்கு மட்டும் இருப்பதுபோல் பொருள் கொண்டுவிடக் கூடாது. எல்லாம் வல்ல தெய்வமாக இப்பிரபஞ்சம் முழுவதும் சாயி நிறைந்துள்ளார். தனது உண்மை பக்தனைக் காக்க எந்த நாட்டிலும், எந்த உருவத்திலும், எந்த சூழ்நிலையிலும் தோன்றி , எப்போதும் காக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருவதுதான் பாபா எனும் இறை சக்தி என்ற தெளிவு வேண்டும். 

வாழும் கடவுளாக பாபா அங்கு வாழ்ந்துகொண்டே இருப்பதாகக் கருதியே ஷீரடி மந்திரின் பூசாரிகளும், அலுவலர்களும் தொண்டாற்றி வருகின்றனர். மிகுந்த சிரத்தையுடன், பொறுப்புடன் பணி செய்து வருகின்றனர். இத்தகைய பொறுப்பினையும், கடமை உணர்வையும் அறிவுறுத்துவது போல் விந்தைச் சம்பவங்களும் நிகழ்வதுண்டு. ஒருமுறை அபிஷேகம் செய்யும்போது பூஜாரி, சாயி மூர்த்தியின் மேல் பாத்திரத்தை தவறுதலாக போட்டு விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவருக்கு முழங்கால் மூட்டு வலி வந்து மருத்துவரிடம் காண்பித்து ஊசி போட்டு, வலி நீக்கும் மாத்திரைகளும் சாப்பிட்டார். அப்போது அந்த பூசாரி பாபாவிடம் "ஏன் நான் இந்த வலி- வேதனையை அனுபவிக்க வேண்டும்?" என்று குறைபட்டுக் கேட்டார். அதே நாள் இரவு பூசாரியின் கனவில் தோன்றிய பாபா " உனக்கு முழங்கால் மூட்டுப் பகுதியில் வலிப்பதாகக் கூறுகிறாய். ஆனால் நீ பாத்திரத்தை என் முழங்காலின் மேல் போட்டபோது எனக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தாயா? என்று கேட்டார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அப்பூஜாரி சாயி மூர்த்தியினை எவ்வகையிலும் காயப்படுத்தாது, உயிருடன் பாபா பரு உடலில் அமர்ந்திருப்பது போலவே எண்ணி சாயி மூர்த்தியை மதித்துப் போற்றிப் பணிகளைத் தொடர்ந்தார்.



சாயி பாபா உயிருடன் இருக்கும் உணர்வும், அனுபவங்களும் சாயி சமஸ்தான அலுவலர்கள் மற்றும் அனைத்து பக்தர்களால் பக்தியுடன் உணரப்படுகிறது. இத்தகைய உணர்ச்சிப்பாங்கும், வழிபாட்டு நிகழ்வுகளும், யாத்திரைகளும் சேர்ந்த ஓர் மந்திர சக்தி மிகுந்த தெய்வீக சூழலுள்ள இடமாக ஷீரடி இருப்பதை நீங்கள் ஷீரடியில் நடந்து செல்லும்போது உணரலாம்.

Samadhi Mandir    (இத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

ஓம் சாயிராம் ஓம் சாயிராம் ஓம் சாயிராம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.