Total Pageviews

Sunday, September 23, 2012

The History of Baba Statue - 6

சாயி மூர்த்தியின் வரலாறு - 6

      பாபா மூர்த்தியினை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரு. தலிம் அவர்கள் தனது உதவியாளர்கள் மறுத்துவிட்ட நிலையில் தானே உளியினை கையில் கொண்டு அந்த முக்கியமான பகுதியினை செதுக்க ஆரம்பித்தார். படபடக்கும் நெஞ்சுடன் "பாபா எனக்கு உதவி செய்யுங்கள்" என்று வேண்டிக் கொண்டே சுத்தியலால் லேசாக தட்ட ஆரம்பித்தார். காற்றின் வெற்றிடம் ஒரு சிலையில் ஏற்பட்டால் அதை நீக்குவதோ, முழுமையாக உடைத்து எடுப்பதோ அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சிற்பியின் பல நாள் இரவு பகல் பாராத கடும் உழைப்பினை பணயம் வைக்கும் செயலாக அது ஆகிவிடக் கூடும். இந்த சூழ்நிலையில், வெற்றிடம் ஏற்பட்டிருந்த பகுதிக்கருகில், அந்த மார்பள் கல்லில் இடது முழங்கால் பகுதியில் ஒரு தட்டு தட்டியதும் வியக்கத்தக்க விதத்தில் சிறு துண்டு மட்டும் தனியாக விழுந்தது. 

சிற்ப மகரிஷி தலிம் அவர்களின் பெயரை காலமெல்லாம் சொல்லப் போகும் அந்த அற்புத மூர்த்தி எவ்வித குறையும் இல்லாமல், முழுமையாக, சிறப்பாக அமைந்தது. எது தேவையற்ற பகுதியோ அது மட்டும் செதுக்கப்பட்டு இருந்தது.  இதைக் கண்டு சிற்பி தலிம் அவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் பாபாவை வணங்கினார். மகிழ்ச்சிப் பெருக்குடன் நடனமாடியபடியே அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த அதிசய நிகழ்ச்சியினைப் பார்த்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 


http://i53.tinypic.com/2h540gn.jpg
திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டே அம்மையார் 
பிறகு இந்த ஐந்து அடி ஐந்து அங்குலம் அளவுள்ள முழுமையான மூர்த்தி அந்த கிராமத்தைச் சுற்றிலும் பெரும் ஆரவாரத்துடன் ஒரு விழாவாக எடுத்துச் செல்லப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மிகுந்த உயிரோட்டத்துடன், ஷீரடி சாயி பாபாவின் தோற்றத்தை அப்படியே வெளிப்படுத்தும் விதமாக அம்மூர்த்தியை உருவாக்கியிருந்ததை பார்த்து அனைவரும் பரவசமடைந்தனர். 

பாபாவின் காலத்தில் அவரோடு வாழ்ந்து அவரை நேரில் கண்டிருந்த சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தரும், திருமதி லக்ஷ்மிபாய் ஷிண்டே அம்மையாரும் பெருவியப்பு அடைந்தனர். பாபா உயிருடன் மீண்டும் அந்த மூர்த்தி வடிவில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்து ஆச்சரியமடைந்தனர்.
http://i55.tinypic.com/23h6075.jpg
சுவாமி ஸ்ரீ சாயி சரணானந்தர் 

இந்த சாயி மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்ட நிகழ்வும், மேலும் பல சுவாரசியமான  தகவல்களும் அடுத்த பகுதியில் தொடர்ந்து காண்போம்.


ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி  ஓம் சாயி சிவ சிவ  சாயி 

(வரலாற்றுப் பயணம் தொடரும்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.