பாபா காமிக்ஸ் !
அமர் சித்திர கதா வழங்கும்
"டேல்ஸ் ஆஃப் சாயிபாபா - தி செயின்ட் ஆஃப் ஷீர்டி "
1967 - ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் சித்திர கதை இதழ்களான 'அமர் சித்ர கதா' இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. இந்தியாவின் பெருமைமிகு ஆன்மீகப் பாரம்பரியத்தை சிறுவர் சிறுமியர் முதல் இளைஞர் முதியோர் வரை எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி மிக அருமையான ஓவியங்களுடன் வெளிவந்த படக் கதைகள் (Comics) மற்றும் 'அம்புலிமாமா, 'பூந்தளிர்', 'கோகுலம்' போன்ற சிறுவர் பத்திரிக்கைகள் வந்த பொற்காலமாக இருந்தது. தற்போது தொலைக்காட்சி - இணைய ஊடகங்களின் வருகையால் அப் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தாலும் எதிர்கால சமுதாயத்திற்கும் படிக்க வேண்டிய அற்புதமான நூல்கள் அவை.
அந்த படக்கதை உலகில் முன்னோடியான அமர் சித்ர கதா நிறுவனத்தில் இன்றும் 400-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளன. இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அவை கிடைக்கின்றன.
மும்பை மாநகரின் கிழக்கு அந்தேரி பகுதியில் இருந்து வெளியாகி வரும் இந்த நிறுவன வெளியீடுகளில் ஷீரடி சாயிபாபா பற்றிய அருமையான பலவண்ண ஆங்கில சித்திரப் படக்கதை புத்தகமே "டேல்ஸ் ஆஃப் சாயிபாபா" என்ற நூல் ஆகும். அழகிய படங்கள் உள்ள இந்நூலினை திருமதி ஷோபா கங்குலி உருவாக்கி உள்ளார். இந்நூல் ஆங்கிலத்தில் இருந்தாலும் பல மொழிகளிலும் மொழிபெயர்த்தால் எல்லா மொழி பக்தர்களும் பயன் அடைவர். இருப்பினும் ஆங்கில மொழியை அன்றாட வாழ்வில் உபயோகிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் சாயி பக்தர்களின் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும். ஒவ்வொரு சாயி பக்தரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். பல பக்கங்கள் உடைய ஒரு பெரிய நூலைவிட, சிறிய வண்ணப் படக்கதை நூல் தரும் வாசிப்பு அனுபவம் மிகவும் சிறப்பானது. அனைத்து சாயி பக்தர்களும் அன்புப் பரிசாக வழங்க வேண்டிய நூல். அமேசான் வலைத்தளத்தில் இந்திய ருபாய்.37-க்கும் கிண்டில் பதிப்பு ரூ.35-க்கும் கிடைக்கிறது. வாங்கிப் படித்து மகிழுங்கள்.
மேலும் விபரங்களுக்கு ack-media டாட் காம், மற்றும் amarchitrakatha டாட் காம் வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள்.
சாயிராம் சாயிராம் சாயிராம்