*கீர்த்தன்- சங்கீர்த்தன்* தொடர் - பகுதி 3
13. நவ வித (ஒன்பது விதமான) பக்தி வழிமுறைகள் யாவை?
இறையருளை யாரும் எளிதாய்ப் பெற ஒன்பது நிச்சய வழிகளை ஸ்ரீமத் பாகவதம் என்ற நூல் விவரிக்கிறது. அந்த ஒன்பது வகையான பக்தி வழிமுறைகளில் இருந்து, ஒவ்வொரு பக்தரும் தங்கள் இயல்புக்கும் விருப்பத்திற்கும் பொருத்தமானவற்றைப் பயிற்சி செய்யலாம். அவையாவன:
1. ஷ்ரவனம் - இறைவனின் பெயரையும், அவர் புகழையும் பற்றிக் காதால் கேட்பது
2.கீர்த்தனம் - இறைவன் புகழைப் பாடுவது/உச்சரிப்பது/ஜபிப்பது
3.ஸ்மரணம் - இறை சிந்தனையிலேயே இருத்தல், நினைவு படுத்திக் கொள்ளல்.
4.பாத சேவனம் - பாத சேவை அல்லது இறைத் தொண்டு, தன்னலம் கருதாமல் மக்கட் தொண்டு புரிதல்
5.அர்ச்சனம் - கடவுளைப் போற்றுதல், அர்ச்சனை செய்தல், துதி செய்து வேண்டுதல்.
6.வந்தனம் - மிக அடக்கத்துடன் மரியாதை செலுத்துதல், வணங்குதல்
7.தாஸ்யம் - கடவுளின் தொண்டனாக, சேவகனாக பணியாற்றுதல், சேவை செய்தல், கடமைகளை நிறைவேற்றுதல்
8.சக்யம் - இறைவனுடனேயே நட்புக் கொள்ளுதல், கடவுளைத் தக்க சமயத்தில் வந்து காக்கும் நண்பனாகக் கருதுதல்.
9.ஆத்ம நிவேதனம் - தன் உடல்-பொருள்-ஆவியை இறைவனிடம் ஒப்படைத்தல், பரி பூரண சரணாகதி அடைதல்.
14. கீர்த்தனத்தால் என்ன இலாபம்?
இறைவனது புகழைப் பாடிப் பாடி பெரும் பேறு பெற்றோர் வரலாற்றில் பலர். ஔவையார், மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், சுந்தரர், பக்த ப்ரஹலாதர், மார்க்கண்டேயர், பட்டினத்தார், அருணகிரிநாதர், சைதன்ய மஹாப்ரபு, கபீர்தாஸ், அன்னமாச்சாரியர் போன்றோர் கீர்த்தன முறையைக் கையாண்டு வெற்றி பெற்ற பலரில் சிலர். கவலையால் நிறைந்த பக்தனின் மனதிற்கு முதலில் நிவாரணம் அளிக்கிறது. கீர்த்தனத்தில் ஈடுபட ஈடுபட, மெல்ல மெல்ல நம்பிக்கை பிறக்கிறது, சமயப் பற்று மேலும் வலுவாகிறது, பொறுமையும் உற்சாகமும் கூடுகிறது, இவ்வளவு பெரிய அண்டத்தைப் (Universe) படைத்த கடவுள் தன்னையும் காப்பார் என்ற மன உறுதி ஏற்படுகிறது. எளிதாக மனம் ஒருமுகப் படுகிறது. மேலும் மனம் லேசான நிலையில், தன்னை எந்த விதத்தில் மேம்படுத்திக் கொள்வது- எவ்வாறு தன்னை சீரிய சிற்பமாக செதுக்கிக் கொள்வது, தனது தவறுகளைத் திருத்திக் கொள்வது என்று ஆக்கபூர்வ சிந்தனை பிறக்கிறது. அனைவரும் ஒன்றாகக் கூடி அமர்ந்து இசைக்கும் போது பயம் நீங்கி புத்தி தெளிவாகிறது. ஒழுக்கம் மேம்படுகிறது. மன அழுத்தமும் பிரயாசையும் (Mental Stress & Strain) மிகுதியான இக் கலியுகத்திலே- கீர்த்தன வழிமுறை மிக மிக எளிதானது. செய்த பாவங்கள் போக்க உதவுவது. சில்லென்று குளிர்ந்த பக்திப் பெருங்கடலில் மூழ்கி எழுந்து பரவசம் அடையவும், ஓ' வென்று கொட்டும் தெய்வீக மந்திர ஒலி அலைகளின் பக்திப் பிரவாக நீர்வீழ்ச்சியில் நனைந்து-மகிழ்ந்து- சிலிர்ப்பு உணர்வு பெறவும் உதவுவது. இளம் வயதினர் தீய பழக்கங்களில் அடிமையாகாமல், போதையின் பாதையில் தடுமாறாமல் காப்பாற்றுவது, முன்னோர் அளித்த இந்த ஆக்கபூர்வமான அற்புத வழிமுறை ஆகும்.
15. நான்கு வித சங்கீர்த்தனங்கள் யாவை?
புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்கள் விளக்கிய நான்கு விதமான கீர்த்தனங்களாவன:
1. குண சங்கீர்த்தனம் - பாடலின் வழியாக இறைவனின் குணங்களை/திறன்களை/சக்திகளை/குணாதிசயங்களை/தன்மைகளை/இயல்புகளைப் புகழ்வது (Qualities & Attributes of the divine)
2. பா(Bha)வ சங்கீர்த்தனம்- பக்தரின் உள் மன உணர்ச்சியை, மனக் கிளர்ச்சியை வெளிப்படுத்தி, விவரித்துப் பாடுவது (Feelings & Emotions)
3. லீலா சங்கீர்த்தனம் - இறைவனின் தெய்வீகத் திருவிளையாடல்களைப் போற்றி, வேடிக்கை நிகழ்ச்சிகளைப் புகழ்ந்து பாடுவது
4. நாம சங்கீர்த்தனம் - ஒரே இறைவனின் பல்வேறு விதமான பெயர்களை/நாமகரணங்களைப் (எ.கா.-1000 பெயர்கள்-சஹஸ்ரநாமம் ) பாடுவது.
(தொடரும்)
ஹரே ராம ஹரே ராம சாயிராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண சாயிகிருஷ்ண ஹரே ஹரே