சாயி மூர்த்தியின் வரலாறு - 4
சிற்ப மகரிஷி பாலாஜி வசந்த் ராவ் தலிம் அவர்களை ஷீரடி சாயி சமஸ்தானம் பாபா மூர்த்தியை வடிவமைக்கத் தேர்ந்தெடுத்தப் பிறகு தலிம் அவர்கள் தம் பணியினைத் துவக்கினார். இரும்பு கொல்லர்கள், தச்சர்கள் ஆகியோரிடமிருந்து கருவிகளை வாங்கினார். பாபாவின் சிலை வடிவ மாதிரியை முதலில் களிமண்ணில் உருவாக்கினார். பாபாவின் ஒரே கருப்பு-வெள்ளைப் புகைப் படம் மட்டுமே திரு. பாலாஜி தலிம் அவர்களிடம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு பாபா மூர்த்தியை தத்ரூபமாக அசல் தோற்றத்துடன் சாயி பாபாவின் முக உருவ ஒற்றுமையுடன் வடிப்பது மிகக் கடினமானதாக இருந்தது.
எனவே திரு. தலிம் அவர்கள் 'தான் வடிவமைக்கும்போது பாபா தரிசனம் அளித்தால்' மூர்த்தியும் சிறப்பாக அமையும்-அதன் மூலம் வணங்கும் பக்தர்களும் மகிழ்ச்சியும் பக்தி பரவசமும் அடைவார்களே என்று நினைத்து வேண்டினார்.
பாபாவின் உதவி!
ஒருநாள் காலை ஏழு மணி அளவில் திரு. தலிம் அவர்கள் தனது ஸ்டுடியோவில் நுழையும்போது அவர் மின்விளக்கினை ஏற்றுவதற்குள்ளாகவே அந்த அறை முழுவதும் மிகப் பிரகாசமான ஒளி பரவுவதை உணர முடிந்தது. அந்த ஒளியில் காட்சி அளித்த சாயி பாபா தனது முகத்தை வெவ்வேறு கோணங்களில் காண்பித்து தலிம் அவர்களின் மனக்குழப்பம் நீக்கி, சந்தேகங்களை விலக்கி தமது உருவத்தினை- சிற்பி தனது மனக்கண்ணில் நன்கு நினைவில் இருத்திக்கொள்ள பேருதவி புரிந்தார். இந்த சம்பவத்திற்குப் பின் சிற்பி தலிம் அவர்கள் மகிழ்ச்சியுடன் மூர்த்தியை வடிவமைக்கத் தொடங்கினார். இறுதியில் அமைந்த அந்த முன்மாதிரிச் சிலை அனைவரது எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே தத்ரூபமாக, உயிரோட்டமாக அமைந்தது.
சிற்பி திரு.தலிம் அவர்கள் பின்பு ஒரு சமயம் சாயிநாராயண பாபா அவர்களிடம் இது தொடர்பாக சான்று பகர்ந்துள்ளார். ஷீரடி பாபா எவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் உதவினார் என்பதையும், மூர்த்தி உருவாக்கும்போது பாபாவின் குரலை மிகத் தெளிவாகக் கேட்டதையும், பாபா வழிகாட்டியதையும் கூறி வியந்து உள்ளார். ஷீரடி சாயி சமஸ்தானத்தினர் உடனடியாக இம்மூர்த்தியினை அனுமதித்ததோடு இம்மூர்த்தியின் மாதிரியை வைத்து இத்தாலியன் மார்பள் கல்லில் இறுதியாக வடிவமைத்து சமாதி மந்திரில் வைக்கப்பட்டது.
|
சாயி மூர்த்தியை உருவாக்கும் அரும்பணியில் தலிம் அவர்கள்
இம்மூர்த்தியினை உருவாக்கும் பெரும் பொறுப்பில் இருந்த சிற்பி தலிம் அவர்கள் சந்தித்த சோதனையும் , சாயி அருளால் அவர் புரிந்த சாதனையையும் பற்றி இனி காண்போம்.
(வரலாற்றுப் பயணம் தொடரும்.....)
|