சாயி மூர்த்தியின் வரலாறு !
அன்பர்களே, சீர்மிகு ஷீரடியின் சாயி பாபா அருள்புரியும் இடங்களான- உலகம் முழுவதும் இருக்கும் கோவில்கள் அல்லது மந்திர்கள் அவரது உருவச் சிலையை வழிபாட்டிற்காக கொண்டுள்ளன. அந்த சிலைகள் பெரும்பாலும் சலவைக்கல்லில் பாபா அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப் பட்டுப் பக்தர்கள் வணங்குவதற்காக கிட்டத்தட்ட ஒரே பாணியில் உருவாக்கப் பட்டுள்ளன. இத்தகைய சாயி பாபா சலவைக்கல் சிற்பங்கள் தோன்றிய வரலாற்றைப் பற்றித்தான் இனி வரும் தொடரில் நாம் காண இருக்கின்றோம்.
சாயி சிலை வரலாறு என்று இத்தொடரின் பெயர் இல்லாமல் சாயி மூர்த்தி வரலாறு என அமைத்ததன் காரணம் என்னவெனில், ஹிந்து கலாசார சிலை வழிபாடு என்பது மூர்த்தி வழிபாடே- என்பதை விளக்குவதற்காகவே. இந்தியாவின் கடைசி சில நூற்றாண்டுகளில் சிலை வழிபாடு என்ற வார்த்தை தவறாக பரப்பப்பட்டு, தவறாக புரிந்து கொண்ட வார்த்தையாகி விட்டது, பெரும்பாலும்.
உலகின் பழமை வாய்ந்த ஹிந்துக் கலாச்சாரத்தில் மூர்த்தி என்ற சமஸ்க்ருத வார்த்தையானது - தெய்வீக அருட்சக்தியே ஒரு உருவமாக குவிந்து ஓர் இடத்தில் காணப்படுவதைக் குறிக்கும். அதாவது, கண்ணுக்குத் தெரியாத இறை சக்தி-கண்ணுக்குத் தெரிந்த சாயி பாபா என்ற பெயரில் அவதாரம் புரிந்து, பல ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில், கண்கள் என்ற புலன் (sense) உடைய மக்கள் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையில் ஒரு உருவமாக, பக்தர்கள் வணங்குவதற்கும், சாயி அவதார மகிமை உணர்ந்து வேண்டுகோள் விடுப்பதற்கும், ஆறுதல் பெறுவதற்கும், தைரியம் அடைவதற்கும், வாழ்க்கைச் சிக்கலில் சிக்கித்தவிப்போர் நம்பிக்கை பெறுவதற்கும், ஒரு மனத் தெம்பு ஊட்டுவதற்கும், நம்மைக் காக்க இதோ நம் அருகில் கடவுள் என்று குழப்பம் நீங்கி மனம் ஒன்றுகுவிப்பு (focus) அடைவதற்கும், மன ஓர்மையை (concentration) வளர்த்துக் கொள்வதற்கும், எந்தவிதமான அறிவு வளர்ச்சி உடையோரும், ஏழை எளியோரும், எளிதில் கடவுளிடம் முறையிட்டு வேண்டுவதற்கும், மந்திர சக்தி பயன்படுத்தி-முறைப்படி பூஜை செய்து அமைக்கப் படுவதே 'மூர்த்தி' ஆகும். ஆயிரங்கணக்கான பக்தர்களின் எண்ணத்தின் ஆற்றலும், கோவிலைப் பராமரிப்போரின் மந்திர உச்சாடன ஒலி அதிர்வலைகளும், தெய்வீக அருட்சக்தியான இறை ஆற்றலும் ஒன்று குவியும் இடமே அந்த மூர்த்தி அமைந்துள்ள ஆலயம் ஆகும். சூரிய கதிர்கள் உலகமெங்கும் இருந்தாலும் ஒரு கண்ணாடி லென்ஸ், அந்த கதிர்களை சில நிமிடங்களில் ஒன்று குவித்து நெருப்பினை உருவாக்கி விடுவது போல, உலகம் முழுவதும் இறை அவதார சாயிபாபாவின் ஆற்றல் நிறைந்து இருந்தாலும் பக்தர்களின் தினசரி வழிபடும் பயன்பாட்டிற்காக அமைக்கப் பட்டுள்ளதே 'சாயி மூர்த்தி' என்று கூறலாம்.
இளைஞர்கள் அவரவர்தம் பொறுமை மற்றும் நம்பிக்கைக்கேற்ப இம்மூர்த்தியை வணங்கலாம். அல்லது சாயி பாபாவின் திரு உருவத்தை மனதில் பதித்துக்கொண்டு- எங்கும் அவர் அருள் சக்தி நிறைந்து இருப்பதை உணர்ந்து எந்த இடத்திலும் வேண்டி வணங்கி நினைத்துக் கொள்ளலாம்.
(தொடரும்)