Saturday, July 13, 2013

Jhola Bag!

பாபாவின் ஜோலா பை !

சாயி பந்துக்களே (சொந்தம்-உறவுகள்), நாமெல்லாம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற முக்கிய நபர்கள் சிலரும் தம் தோளில் மாட்டி இருக்கும் ஜோல்னா பையைப் பார்த்திருப்போம். இக்கட்டுரையில் நம் பாபா வைத்திருந்த ஜோலா பை- பற்றிய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம். ஜோலா பை என்பது துணியாலான பை அல்லது பணப் பை ஆகும்.

பாபா வைத்திருந்த ஜோலா பை
(Courtesy: rOhit beHaL)

திருமதி. பயஜாபாய்
பாபாவின் மிகச் சிறந்த முன்னோடி பக்தர்களில் ஒருவர்தான், திருமதி பயஜாபாய் அம்மையார் அவர்கள். ஷீரடி புனித ஸ்தலத்திலே சாயி பாபா தமது ஆற்றல்களை, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கு முன்னாலேயே எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது, உயர் தரும சிந்தனையுடன் வாழ்ந்த பயஜாபாய் அம்மையார், தினமும் சப்பாத்தி உணவினை சுட்டு எடுத்துக் கொண்டு கடும் வெயிலில் காடுகளில் அலைந்து திரிந்து பாபா தவம் செய்யும் இடத்தினைக் கண்டுபிடிப்பார். பாபாவிற்கு அந்த உணவினை அளித்துவிட்டு வீடு திரும்புவார்.

 எனக்கு இன்னது நடந்தால், நான் உனக்கு இவ்வளவு பணம் கொடுக்கிறேன் என்று கொடுக்கல் வாங்கலாக கடவுளிடம் உரிமையுடன் மக்கள் பேசும் இக் கலியுகத்தில், அன்னபூரணி மாதாவின் வடிவமாக பாபாவிற்கு உணவளித்து தருமம் செய்த பயஜாபாய் போன்ற பெண்மணிகளால்தான் இன்னும் பாரதத்திலும் பிற நாடுகளிலும் சத்தியம் சாகாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் பல கோடி பக்தர்களுக்கு பல நன்மைகள் அருளப் போகும் ஒருவருக்குத் தான் உணவளிக்கிறோம் என்று பயஜாபாய் அம்மையாருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உழவாரப் பணி புரிந்த கர்ம யோகி அப்பர் சுவாமிகளைப் போல, இவர் செய்த தன்னலம் கருதா தரும காரியம் அழியாத புகழுடன் விளங்குகிறது. ஷீரடியில் பிற்காலத்தில் பாபா எவ்வளவு தடவைகள் பயஜாபாய் அம்மையாரின் வீட்டிற்கு பிச்சை பெற சென்றபோதும் அவர் உணவு தராமல் அனுப்பியதில்லை.1876- ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் பஞ்சம் வந்தபோது திருமதி.பயஜாபாய் மற்றும் திரு. நந்துராம் மார்வாடி ஆகியோர் சாயிபாபாவுக்கு உணவளிக்கும் பெரும் பேறு பெற்றனர்.

இவர் போன்ற ஷீரடியின் பல பெண்மணிகளுக்கு பக்தர்களாகிய நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர் போன்றே தரும சிந்தனையுடன் நம் தமிழ் இளைய சமுதாயம் ஊக்கத்தோடு அன்ன தானம், வஸ்திர தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம், பொருள் உதவி, மருத்துவ உதவி, கல்வி தானம் என - பல வகைகளிலும் நல்லது செய்து நற்புகழும் ஆத்ம திருப்தியும் அடையலாம்.

1918- இல் மஹா சமாதி நிலை அடையப் போகும் முன்பு, பாபா தனது துணிப் பையையும் அதில் இருந்த சில காசுகளையும் தாத்யாவிற்கு அளித்தார்.
திரு. தாத்யா
தாத்யா என்பவர் பயஜாபாய் அம்மையாரின் தவப் புதல்வர் ஆவார். அந்த ஜோலா பையிலிருந்துதான் பாபா கை விட்டு காசுகளை எடுப்பது வழக்கம். ஒன்றுமே இல்லாத வெறும் ஜோலா பையிலிருந்து தங்க காசுகள், வெள்ளிக் காசுகளை எடுத்து தம்மைக் காண வந்த பக்தர்களுக்கு அளிப்பார் பாபா. இன்றுவரை இந்த அற்புதத்தை மக்கள் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் படிக்கும் போது இது என்ன சித்து விளையாட்டு என்று தோன்றலாம். நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் எண்ணற்ற, அசைக்க முடியாத நம்பிக்கை உடைய பக்தர்களின் அனுபவத்தில் இதெல்லாம் பாபாவுக்கு சர்வ சாதாரணம் என்பதை உணர்ந்துள்ளார்கள். அது போன்ற அற்புதங்களை நேரில் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் இன்றும் பலருக்குக் கிடைத்து வருகிறது. அந்த ஜோலா பை சம்பந்தமான ஒளிக் காட்சி கீழே உள்ளது:


இன்று அந்த ஜோலா பை - திரு. முகுந்த்ராவ் பாஜிராவ் கோட்டே பாட்டீல் அவர்களிடம் உள்ளது.

திரு. முகுந்த்ராவ் அவர்கள் திருமதி பயஜாபாய் அவர்களின் கொள்ளுப் பேரனும், தாத்யா அவர்களின் பேரனும் ஆவார். திரு.முகுந்த்ராவ் அவர்கள் அந்த புனித ஜோலா பையினை காசுகளுடன் ஒரு கண்ணாடி பேழையில் வைத்து, கவனமாக தினமும் போற்றிப் பாதுகாத்து வருகிறார்.

புனித ஜோலா பை வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழை

கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள பாபா அளித்த காசுகள்
சாயி ஓம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.