Total Pageviews

Saturday, July 21, 2012

The History of Baba Statue - 3

சாயி மூர்த்தியின் வரலாறு - 3   


உலகம் உள்ளளவும் இருக்கப் போகும் சாயி மூர்த்தியை உருவாக்கிய திரு. பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்களின் ஆன்மீகத் தொண்டு மிகவும் போற்றத்தக்கது. 'சிற்ப மஹரிஷி' என்கின்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற திரு பாலாஜி பாவ்சாகேப் தலிம் அவர்கள்  இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் 1888-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தகப்பனார் திரு. வசந்த்ராவ் ஹைதராபாத் நிஜாமிடம் கட்டிட ஒப்பந்தக்காரராக இருந்தார். அப்போது பல தடவைகள் நிஜாமினால் கௌரவிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அவர் இளம் வயதிலேயே தனது மூன்று குழந்தைகளை, தம் மனைவி திருமதி. சரஸ்வதியை விட்டுவிட்டு காலமானார். 

அவரின் குடும்பம் பிறகு ஹைதராபாதை விட்டு மும்பையில் வந்து குடியேறியது. தனது பள்ளிப் படிப்பை முடித்த இளம் பாலாஜி தலிம் அவர்கள் மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் சிற்பக்கலை வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். அங்கு டாலி குர்ஷேட்ஜி என்ற பெயர் பெற்ற உதவித்தொகை பெற்று அந்த தொகையில் தனது படிப்பை முடித்தார். இவருடைய மகனார்தான் திரு. ஹரிஷ் பி. தலிம் அவர்கள். இன்று திரு. ஹரிஷ் பி. தலிம் அவர்களின் புதல்வரான திரு. ராஜிவ் ஹரிஷ் தலிம் அவர்கள்,அதாவது - பாலாஜி வசந்த்ராவ் தலிமின் பேரன் சிற்பக் கலைக் கூடத்தை நடத்தி வருகிறார்.

மும்பை மாநகரில் ஜூலை 14, 1963 அன்று பிறந்த திரு. ராஜிவ் தலிம் அவர்கள் இப்போது இந்தியாவின் தலை சிறந்த சிற்பிகளில் ஒருவராக, வெண்கலம், மார்பிள் மற்றும்  பிளாஸ்டர் பொருட்களில் சிற்பத் தொழில் செய்து வருகிறார். 
அந்த புகழ் பெற்ற சிற்பிகளின் புகைப் படத்தைக் கீழே காணுங்கள்.


திரு. பாலாஜி வசந்த்ராவ்  தலிம் (இடது பக்கத்தில்) 

திரு. பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்களினால் 1918 - இல் உருவாக்கப்பட்டதுதான் தலிம்ஸ் ஆர்ட் ஸ்டூடியோ என்கின்ற சிற்பக் கலைக் கூடம்.

மனித உருவச் சிலைகள் செய்வதில் ஐரோப்பியருக்கு நிகராக போட்டியிடுவதற்கு மேதைத்தனம் வேண்டும். அத்தகைய தனித் திறமை கொண்டிருந்த திரு.பாலாஜி வசந்த்ராவ் தலிம் அவர்களால் உருவாக்கப் பட்டு, பிரிட்டிஷ் நாட்டின் இலண்டன் மாநகரில் வெம்ப்ளி பகுதியில் நடந்த ஒரு பொருட்காட்சியில் தங்கப் பதக்கம் பெற்ற ஒரு பாம்பாட்டி சிலை- புகைப் படம் இதோ :

(Courtesy: Talims Art Studio)

இந்த வெண்கலச் சிலையின் நுணுக்கமான வேலைப்பாட்டிலிருந்தே பாலாஜி தலிம் அவர்களின் கைவண்ணத்தை, கற்பனைத் திறனை, ஆக்கபூர்வ சக்தியை உணர்ந்து கொள்ள முடியும்.

(வரலாற்றுப் பயணம் தொடரும்)